சவுக்கு மரம் சாகுபடி முறை

இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் அதிகம் சிரமப்படாமலும், அதேசமயம் கூடுதல் லாபம் ஈட்டித் தரும் பயிர்களையே சாகுபடி செய்ய விரும்புகின்றனர். காரணம், இன்று கிராமப்புறங்களில் விவசாயப் பணிக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் நகர்ப்புறங்களுக்கு இணையாகக் கூலி கேட்பதால் கட்டுப்படி ஆகாத நிலையில் வேலையாள்களை அழைப்பதில்லை.

அதேசமயம்... என்ன தான் இயந்திரங்களைக் கொண்டு சாகுபடி செய்யலாம் என்றாலும் அந்த இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளை பார்க்கவோ, அதை பராமரிக்கவோ விவசாயிகளால் முடியவில்லை. மேலும் அவற்றின் விலையும் அதிகம்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சிரமம் இல்லாத, சாகுபடி செலவு குறைந்த பயிரான சவுக்கு பயிரிடலாம். மேலும் இவற்றை வியாபாரிகளும் நிலத்துக்கே வந்து வாங்கிச் செல்வதால் பெரும்பாலான விவசாயிகள் தற்போது சவுக்கு சாகுபடி செய்யவே விரும்புகின்றனர்.

அந்த வகையில் விவசாயத்துக்கு ஏற்றது சுங்குனியானா சவுக்கு ரகம். இம்மரம் சாதாரண சவுக்கு மரங்களை விட வேகமாக வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இது 15 முதல் 25 மீட்டர் உயரம் வரையிலும், குறுக்கு விட்டம் 30 முதல் 50 செ.மீ. வரையிலும் வளரக்கூடியது.

இம்மரங்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரமும், 700-1,500 மி.மீ. மழையளவு வரையான பல்வேறு தட்பவெட்ப நிலைகளைத் தாங்கி வளரக்கூடியது. மணற் பாங்கான நிலங்களிலிருந்து களிமண் வரையிலான எல்லா வகை மண்ணின் வளத்துக்கு ஈடுகொடுத்து நன்கு வளரும். அமிலத்தன்மை உள்ள களிமண்ணிலும், காரத்தன்மை மிக்க சுண்ணாம்புச்சத்துள்ள மண்ணிலும் வளரும்.

 

நாற்றங்கால் அமைத்தல்

மணல், செம்மண் 9:1 என்ற விகிதத்தில் கலந்து சுமார் 30 செ.மீ. உயரத்துக்கு தாய்பாத்தி அமைக்கவேண்டும். அதிக அளவு மணல், விதைகள் அழுகுவதையும், பூஞ்சாண் பாதிப்பையும் தடுக்க உதவும். விதைகளை சம அளவு மணலுடன் நன்கு கலந்து விதைப்பதால் அவற்றைச் சீராக பரவலாக விதைக்கலாம். இந்த விதைகள் காற்றில் அடித்து செல்லப்படாமலிருக்க சிறிதளவு மணலை விதைகளை மூடும் அளவுக்குத் தூவுதல் வேண்டும்.

வைக்கோல், தழைகளைக் கொண்டு தாய்ப்பாத்தியை மூடி, பூவாளியால் தினம் இருமுறை நீர் தெளித்து வரவேண்டும். சவுக்கு மர விதைகள் 10 தினங்களில் முளைத்து விடும். ஒரு கிலோ விதையிலிருந்து சுமார் ஒரு லட்சம் நாற்றுகள் கிடைக்கலாம். 50 சதவீதம் முளைத்த நாற்றுகள் சுமார் 3-5 செ.மீ. உயரம் அடைந்தவுடன் உரமண் கலவை நிரப்பப்பட்ட 10-20 செ.மீ. அளவுள்ள பைகளுக்கு மாற்ற வேண்டும்.

அந்தப் பைகளில் பிராங்கியா பாக்டீரியா சேர்ப்பது வீரிய வளர்ச்சிக்கு உதவும். பைகளுக்கு மாற்றப்பட்ட நாற்றுகள் சுமார் 3 மாதங்களில் 25 முதல் 30 செ.மீ. உயரம் வளர்ந்து நடவுக்குத் தயாராகிறது. கலப்பின ஆண் மலட்டுத் தன்மை கொண்ட மரங்களிலிருந்து இளம் துளிர்ப்பு துணுக்குகள் வேர் ஊக்கி நொதிகளினை தடவி துளிர்க்க செய்து நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.

 

நடவு

சாதாரண சவுக்கு போன்று 1மீ.x 1மீ. அல்லது 2மீ. x 2மீ. இடைவெளியில் தேவைப்படும் கழிகளின் பருமனுக்கு ஏற்ப நாற்றுகளை உழவு செய்த நிலத்தில் 0.30x0.30x0.30மீ. அளவுள்ள குழிகளில் நடவேண்டும். தொழுஉரம், மண்புழு உரம் இடுவது வளர்ச்சியை மேலும் கூட்ட உதவும்.

நடவு செய்யப்பட்ட, முதல் 2-3 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 மீட்டர் உயரம் வரை வளரும். தாய்லாந்து நாட்டு கலப்பின வகையான இவ்வகை சவுக்கு சுமார் ஐந்து ஆண்டுகளில் 20 மீட்டர் உயரமும், 25 செ.மீ. குறுக்கு விட்டமும் கொண்ட மரமாகிறது. நடவு செய்யப்பட்ட முதல் ஆண்டு மட்டும் கிளை எடுப்பது அவசியமாகிறது. அதன் பின் மரத்திலிருந்து விழும் சிறு கிளை துண்டுகள் போர்வை போல அமைந்து களைகளின் வளர்ச்சியை முழுக்க கட்டுப்படுத்துகிறது.

வறட்சிக் காலங்களில் நீர் பாய்ச்சுவது செடிகளின் இழப்பை முழுக்க தவிர்க்க பயன்படும்.

 

மகசூல்

இம்மரத்தை 3 முதல் 5 ஆண்டுகளில் தேவைக்கேற்ப வெட்டலாம். கழிகள், விறகுக்கு 3 ஆண்டுகளிலும் சிறு நாற்காலிகள், மரத் தளவாடப் பொருள்கள், சிறு கருவிகள், நீண்ட கழிகளுக்குத் தேவையான மரத்துக்கு 5 ஆண்டுகளிலும் வெட்ட வேண்டும். நான்கு ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் 40 டன்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

கழிகளாக விற்றால் ஒரு மரத்துக்கு ரூ.25 வரை கிடைக்கிறது. இவ்வாறாக ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. சுங்குனியான கலப்பின சவுக்கில் மரம் வெட்டப்பட்டபின் வெட்டு முகப்பிலிருந்து மறு துளிர் வளரக்கூடிய குணமிருப்பதால் முதலீடு இல்லாமல் மீண்டும் அறுவடை செய்து வருவாய் ஈட்டலாம்.

 

பயன்கள்

வளர்ந்த மரத்திலிருந்து சிறுசிறு பர்னிச்சர்கள், விவசாய கருவிகள் செய்யலாம். மரம் வெடிக்கும் தன்மை கொண்டது. கட்டுமானப் பணிகளில் சாரம் அமைக்க தாங்கு கழிகளாகவும், சிறு வீடுகளின் கூரை மற்றும் கம்பங்களுக்கும் பயன்படுகிறது.

மரம் கனமீட்டருக்கு சுமார் 900-1,000 கிலோ வரை எடையுள்ளதால், சிறந்த விறகாகவும், கரி தயாரிக்கவும் பயன்படுகிறது.

இதன் கரி 34,500 அளவு வெப்பம் தரவல்லதால், அனைத்து விறகு மர இனங்களை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

காகித உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக இதனைப் பயன்படுத்தலாம். இம்மரத்தை தோட்டங்களின் எல்லையில் காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கலாம். இம்மரத்தின் வேர்களில் காணப்படும் பிராங்கியா எனப்படும் பாக்டீரியா காற்றிலுள்ள நைட்ரஜனை நைட்ரேட் உப்புகளாக மாற்றி நிலத்தில் சேமிப்பதால் மண்வளம் மேம்படுகிறது.