பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை

பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை

பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை பசுந்தீவனச் சோளம் :நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரி விகிதத்திலும் கிடைக்காததே கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு பசுந்தீவனச் சோளம் (கோ.எப்.எஸ். - 31) பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்கிறது.

* பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரகத்தின் சிறப்பியல்புகள்: அதிக கிளைக்கும் திறன் கொண்டது. அகலமான இலைகள், கதிர்களில் இருந்து மணிகள் கொட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது.

* அதிக புரதச்சத்து (9.86 சதவீதம்) கொண்டதும், அதிக பசுந்தீவன உற்பத்தி கொண்டதுமாகும்.

* அதாவது 1 ஹெக்டேருக்கு 1 ஆண்டில் 190 டன் என்ற அளவில் அறுவடை செய்யலாம். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. சுவையான பசுந்தீவனமாகும். கால்நடைகள் இவற்றை விரும்பி உண்கின்றன.

 

சாகுபடி தொழில்நுட்பம் :

 

* இந்த பசுந்தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.

* நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பால்போ பாக்டீரியா கலந்து இட வேண்டும்.

* பின்னர், 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீட்டர் நீளமும், 60 செ.மீ. இடைவெளியும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.

* மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் இட வேண்டும்.

* மண் பரிசோதனை செய்யாவிடில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.

* மேலுரமாக விதைத்த 25 நாள்கள் கழித்து 12 கிலோ தழைச்சத்து போட வேண்டும்.

* மறுதாம்புப் பயிரில் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் 18 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

* 4-ஆவது அறுவடையின் போது ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்துடன் 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தையும் இடுவது நல்லது.

* ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை பாத்திகளின் இருபுறமும் விதைக்க வேண்டும்.

* விதைக்கு விதை இடைவெளி 10 முதல் 15 செ.மீ. இருக்க வேண்டும். விதைத்த 20 நாள்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.

* தேவைப்பட்டால், 35 முதல் 40-ஆவது நாளில் அடுத்த களை எடுக்கலாம்.

 

நீர் மேலாண்மை :

 

* நீர் மேலாண்மையைப் பொருத்தவரை விதைத்தவுடன் ஒரு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

* 3-ஆவது நாளில் உயர் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

 

பயிர் பாதுகாப்பு :

 

* பொதுவாக பயிர் பாதுகாப்பு தேவையில்லை. விதை உற்பத்திக்காக பயிர் செய்தால், குருத்து ஈ காணப்பட்டால் விதைத்த 10-ஆவது நாளில் புரபனோபாஸ் 300 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

* பசுந்தீவன அறுவடைக்கு 30 நாள்களுக்கு முன் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

 

அறுவடை :

 

* விதைத்த 65 முதல் 70 நாள்களில் அறுவடை செய்து விடலாம். பிறகு ஒவ்வொரு மறுதாம்பு பயிரும் 50 நாள்கள் இடைவெளிகளில் அறுவடை செய்யலாம்.

* கோ.எப்.எஸ். - 31 ரகம் 1 ஏக்கரில் 68 டன்கள் பசுந்தீவனம் முதல் 7 அறுவடைகளில் கிடைக்கும்.

* பூக்கும் பருவத்துக்கு முன் கால்நடைகளுக்கு வழங்க வேண்டாம்: பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரக பயிர் விளைந்த 40 நாள்களுக்குள்பட்ட இளம் பயிர் பருவத்தில் கால்நடைகளுக்கு வழங்கக் கூடாது.

* அந்த பருவத்தில் ஹைட்ரஜன் சயனைடு என்ற நச்சுப் பொருள் அதிகம் இருப்பதால் அது கால்நடைகளுக்கு ஏற்றதல்ல.

* எனவே பயிர்கள் பூத்தப் பின் அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

 

விதை உற்பத்தி :

 

* இந்த தீவன சோளத்தை விதை உற்பத்தி செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்.

* விதை உற்பத்தி செய்வதாக இருந்தால் பயிர் இடைவெளியை மட்டும் அதிகரித்து 60-க்கு 15 செ.மீ. அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மற்ற தொழில்நுட்பங்களை சாகுபடி குறிப்பில் உள்ளதுபோல கடைப்பிடிக்கலாம். பயிர்கள் 110 முதல் 125 நாள்களில் விதை அறுவடை செய்யலாம்.

* 1 ஏக்கருக்கு 300 கிலோ வீதம் விதை மகசூல் தரும். ஆண்டுக்கு 3 முறை விதை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த விதைகளை 60 நாள்களுக்குப் பிறகு விதைப்புக்கு உபயோகிப்பது நல்லது.