பனைமரம் சாகுபடி முறைகள்

பனைமரம் சாகுபடி முறைகள்

பனைமரம் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினமாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையாக தானாகவே வளரும் இயல்பை உடையது.

பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுத்துகொள்கிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகள் ஏதும் இதற்கு கிடையாது.

இதன் உச்சியில், கிட்டத்தட்ட 10 – 20 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனைமரமானது இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மியான்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

பனை மரம் எப்படி பயிரிடுவது…?

கூந்தல் பனை மற்றும் கரும்பனை ஆகிய இரகங்கள் உள்ளன.

எல்லா வகையான மண்ணிலும் வளரும் என்றாலும் மணல்சாரி மற்றும் இருமண்பாட்டு நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

அனைத்து மாதத்திலும் நடவு செய்யலாம். ஆனாலும் கார்த்திகை மாதத்தில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும், நாற்றுவிட்ட பனங்கிழங்குகளை எடுத்து நட்டும் பனையை வளர்க்கலாம்.

நேரடி விதைப்பிற்கு 3 x 3 மீட்டர் இடைவெளியில் குழிகள் தோன்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 400 குழிகள் வரை எடுக்கலாம். குழியானது 20x20x20 செ.மீட்டர் அளவில் இருக்க வேண்டும். முதிர்ந்த பனம் பழத்திலிருந்து எடுக்கப்பட்டு மூன்று வாரம் நிழலில் சேமிக்கப்பட்ட பனங்கொட்டைகளை குழிக்கு 3 முதல் 4 வரை போட்டு இலைச்சருகுகளை கொண்டு மூட வேண்டும்.

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டு முதல் மூன்று வருடம் வரை மாதம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் பருவமழை சீராக பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது. பனை மரம் பொதுவாக மானாவாரியாக வளரும் தன்மை கொண்டது.

தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை பாதி குழிவரை நிரப்ப வேண்டும். பின்பு வருடாவருடம் எரு போட்டால் வளர்ச்சி சீராக இருக்கும்.

மூன்று வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். ஆறு வாரங்களில் முளைப்பு முடிந்து விடும். ஒவ்வொரு குழியிலும் ஒரு ஆரோக்கியமான செடியினை விட்டு மற்றவற்றை களைத்து விட வேண்டும்.

பனைமரம் மெதுவாக தான் வளரும். விதைத்து 5 மாதங்கள் கழித்து தான் முதல் குருத்தோலை தோன்றும். 13 முதல் 15 வருடம் கழித்து சுமார் 12 முதல் 13 மீட்டர் உயரம் வளர்த்தப்பின் தான் பாளை விட்டு பதனீர் கொடுக்கும்.

சராசரியாக ஒரு மரம் வருடத்திற்கு 125 முதல் 150 லிட்டர் பதனீர் கொடுக்கும். தை முதல் ஆனி மாதம் முதல் பதநீர் கிடைக்கும். ஒரு லிட்டர் பதநீரை காய்ச்சினால் 180 முதல் 250 கிராம் பனை வெல்லம் கிடைக்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 24 கிலோ பனைவெல்லம் கிடைக்கும்.

பனங்கிழங்கு தயாரித்தல்

பனங்கிழங்கு தயாரிக்க கொட்டைகளை தனியாக பிரித்து ஒரு வாரம் நிழலில் காய விட வேண்டும். நிலத்தில் 6 அடி நீளம், 3 அடி அகலத்தில் பாத்திகள் பிடித்து அதில் கொட்டையின் மேல்புறம் வானத்தை பார்த்து இருக்குமாறு நெருக்கமாக விதைக்க வேண்டும்.

குழிகளில் செம்மண்ணையும், மணலையும் கலந்து போட வேண்டும். இதனுடன் எரு கலந்து இடுவதால் கிழங்கு பெரியதாக கிடைக்கும்.

விதைத்ததும் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.

கோழிகளிடமிருந்து பாதுகாக்க சுற்றிலும் முள் போட வேண்டும். விதைத்த 70 நாட்களில் கிழங்கு வளர்ந்து விடும். பின்பு கிழங்கைப் பிடுங்கி கொட்டையைத் தனியாகவும், காம்பைத் தனியாகவும் வெட்ட வேண்டும். அதன் பின் கிழங்கை விற்பனை செய்யலாம்.