செண்டுமல்லி சாகுபடி முறைகள்
Admin    3 months ago    1906
Item number 1

செண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும்.

சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.

இரகங்கள் :

எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

மண் வகைகள்

அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றது.

பருவம்

செண்டு மல்லி பயிரிட ஏற்ற பருவமாக அக்டோபர் முதல் ஜனவரி வரையிலும், பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரையிலும் பயிரிட்டால் விவசாயிகள் அதிக பலன் பெறலாம்.

 

விதையளவு

செண்டுமல்லி ஒரு ஹெக்டேருக்கு குட்டை ரகத்துக்கு 75 ஆயிரம் விதைகளும், நெட்டை ரகத்துக்கு 55 ஆயிரம் விதைகளும் இட வேண்டும்.

 

நாற்றங்கால் பராமரிப்பு

பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க் கழிவை வளர் தட்டுகளில் நிரப்பி குழிக்கு ஒரு விதை வீதம் நிரப்பி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி பாலித்தீன் பேப்பர் மூலம் மூடி மூன்று நாள்கள் 50 சதவீத நிழல் உள்ள இடத்தில் அல்லது நிழல் வலையில் வைக்க வேண்டும். அப்போது முளைப்புத் திறன் அதிகரிக்கும். பின்னர் ஒரு நாளைக்கு இரு முறை பூ வாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 19:19:19 என்ற உரத்தை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து 15ஆம் நாள் தெளிக்க வேண்டும்.

 

நடவு முறை மற்றும் இடைவெளி

25 நாள்கள் வயதான செண்டுமல்லி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். குட்டை வீரிய ஒட்டு ரகத்தை 40 ல 30 செ.மீ. அளவில் ஒரு ஹெக்டேருக்கு 74 ஆயிரம் செடிகளை நடலாம்.

நெட்டை வீரிய ஒட்டு ரகத்தை 60 ல 30 செ.மீ. என்ற அளவில் 55 ஆயிரம் செடிகளை நடலாம்.

 

 

நீர்ப் பாசனம் மற்றும் நீர்வழி உரமிடுதல்

வீரிய ஒட்டு ரகத்துக்கு 90:90:75-வுடன் தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை பயிர் காலம் முழுவதும் நீர்பாசனத்துடன் இட வேண்டும்.

 

களை எடுத்தல்

நடவு செய்த 30, 60ஆம் நாள்களில் களை எடுக்க வேண்டும்.

 

மண் அணைத்தல்

களையெடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இது நன்கு பேர் பிடிக்கவும், செடியினை தாங்குத் திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

 

அறுவடை

மேற்கண்ட முறைகளை முறையாக கடைபிடித்தால் நடவு செய்த 60ஆம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும். காலை நேரத்தில் பூக்களைச் செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்குப் பையில் அடைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம்