மாங்காய் விலை சரிவால் விவசாயிகள் சோகம்
Admin    2 weeks ago    50
Item number 1

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 42,000 ஏக்கர் பரப்பில், மல்கோவா, பெங்களூரா, செந்தூரா, நீலம், அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனபள்ளி உள்ளிட்ட, 57 வகையான மாங்கனிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், பர்கூர் வட்டார பகுதியில் மட்டும், 50 சதவீதம் உற்பத்தி ஆகிறது. இதை, மாங்கூழ் தொழிற்சாலைகள் மூலமாக அரவை செய்யப்பட்டு வெளி மாவட்டம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும், ரூ.60 முதல், 80 கோடி வரை அன்னிய செலவாணி கிடைக்கிறது.


மேலும், ஒரு ஏக்கருக்கு, 15 டன் முதல், 20 டன் வரை, உற்பத்தி செய்யப்பட்டு, இரண்டு லட்சம் மெட்ரிக் டன் வரை, அறுவடை செய்யப்படுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பூக்கள் பூத்து, ஏப்ரல் துவக்கத்தில் இருந்து அறுவடை செய்வது வழக்கம். ஊரடங்கால் தற்போது, 50 சதவீதம் வரை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கி உள்ளனர். இந்தாண்டு குறைவான மழை காரணமாக உற்பத்தி குறைவு, வெளியூர் போக்குவரத்து தடை காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது பராமரிப்பு, உற்பத்தி செலவு, அறுவடை கூலி போன்றவை அதிகரிப்பால், செலவு செய்த பணம் கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, அரசு தலையிட்டு மாங்காய்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என, மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.