துவங்கியது மங்குஸ்தான் பழ சீசன்

துவங்கியது மங்குஸ்தான் பழ சீசன்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-ஊட்டி செல்லும் மலைப்பாதையில் கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்து உள்ளது. இங்கு 8.28 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பழப்பண்ணை பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 75 நாட்களில் சராசரியாக 140 மி.மீ மழை பெய்யும்.

மிதவெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட பகுதியில் இந்த பழப்பண்ணை இருப்பதால் எலுமிச்சை வகைகள், கொய்யா, பலா, பப்ளிமாஸ் போன்ற பயிர்களும் மலைப்பிரதேசங்களில் நன்கு வளரக்கூடிய வாசனை திரவிய பயிர்களான கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, மிளகு, பிரியாணி இலை, மணிலா போன்ற பயிர்களும் இயற்கை காயகல்பம் ஆன துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான், முட்டைப்பழம் மற்றும் பழங்களின் அரசி என வர்ணிக்கப்படும் மங்குஸ்தான் பழம் ஆகிய பழங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பண்ணையில் பலாப்பழ சீசன் முடிவடைந்த நிலையில், மங்குஸ்தான் பழ சீசன் துவங்கி உள்ளது. கல்லாறு அரசு பழப்பண்ணையில் மொத்தம் 202 மங்குஸ்தான் மரங்கள் உள்ளன. அதில் 180க்கும் மேற்பட்ட மரங்களில் பழங்கள் காய்த்து பழுக்க துவங்கி உள்ளன.

இப்பழ சீசன் ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். இதற்காக குன்னூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கடந்த 18ந் தேதி நடந்த ஏலத்தில் மங்குஸ்தான் பழங்களை பறிக்க ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதனையடுத்து பழங்களை அறுவடை செய்யும் பணி செவ்வாய்க்கிழமை முதல் துவங்கியுள்ளது.

தனிச்சுவை கொண்ட கல்லாறு மங்குஸ்தான் பழங்களை வாங்க தென்காசி, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உள்ளூர் வியாபாரிகளும் கல்லாறு பழப்பண்ணைக்கு படையெடுத்து வருகிறார்கள்.