கால்நடைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல்
Admin    3 months ago    37
Item number 1

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவிகிதம் வரை கால்நடை வளர்ப்பு குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வேளாண் தொழிலை பொருத்தவரை சிறந்த உபதொழிலாக கருதுவது கால்நடை வளர்ப்பு ஆகும். ஆனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பராமரிப்பு, தீவனம் போன்ற காரணங்களினால் அதிக செலவீனம் ஏற்படுவதால் கால்நடைகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தனர்.

தற்போது திருப்புவனம் வட்டாரத்தில் கறவை மாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு உள்ளிட்டவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. எருமை மாடுகளின் எண்ணிக்கை 400 ஆகவும், செம்மறி ஆடுகள் 15,510, வெள்ளாடுகள் 14,105 என்ற எண்ணிக்கையில் இருந்து வருகின்றன. எனினும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதுள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறும் போது தீவனங்களின் விலையேற்றம், குறைவான மேய்ச்சல் நிலம், கூலி ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் கால்நடை வளர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது என தெரிவித்தனர்.

திருப்புவனம் ஒன்றியத்தில் போதிய கால்நடை மருத்துவர் இல்லை என்ற குற்ற சாட்டும் எழுந்துள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான மருந்து,  மாத்திரைகள் வெளியில் வாங்கும் நிலை உள்ளது. செயற்கை கருவூட்டலுக்கு போதிய மருந்து கிடைப்பதில்லை. இது போன்ற காரணங்களினால் கால்நடை வளர்ப்பு வெகுவாக குறைந்து விட்டதாக தெரிவித்தனர்.