பீட்ரூட் என்பது ஒரு வகைக் கிழங்கு வகையாகும். இந்த பீட்ரூட் கிழங்குகள் சிகப்பு அல்லது நாவல் நிறம் உடையவை. இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பர்.
பீட்ரூட் எப்படி பயிரிடுவது…?
ஊட்டி 1, கிரிம்சன், குளோப், டெட்ராய்ட், அடர் சிகப்பு, சிவப்பு பந்து ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
ஜீலை – ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவையாகும்.
செம்மண், கரிசல் மண்ணில் வளரும் தன்மையுடையது. இப்பயிர் குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும்.
பீட்ரூட் கிழங்கின் வடிவம் சிதறாமல் இருக்க நிலத்தினை 15-20 செ.மீ ஆழத்திற்கு நான்கைந்து முறை உழுதுவிட வேண்டும். நில மேற்பரப்பில் கட்டிகள் இல்லாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும். நன்கு மக்கிய கோழி உரம் எக்டருக்கு 7 டன்கள் வரை இட்டு நிலத்துடன் கலக்கும்படி உழுதுவிட வேண்டும். அதோடு அடி உரமாக டி.ஏ.பி 3 மூட்டைகள் இடவேண்டும்.
ஒரு எக்டருக்கு 6 கிலோ விதைகள் தேவைப்படும்.
வயலில் 1- 1.5 அடி இடைவெளியில் பார் போட்டு பாரின் இருபுறமும் 4 அங்குல இடைவெளியில் விதையினை விதைக்க வேண்டும். நல்ல விதைகள் கிட்னி (சிறுநீரகம்) வடிவில் பழுப்பு நிறத்தில் இருக்கும். சாதாரண மாதங்களில் ஒரு விதையே போதுமானது. ஆனால் கடும் கோடையில் விதை பழுதில்லாமல் முளைக்க இரண்டு விதைகள் நடவேண்டும். பொதுவாக பீட்ரூட் பயிரில் விதை முளைப்பு பிரச்னைகள் ஏதும் கிடையாது.
விதை நட்டப்பின் முதல் 25 நாட்களுக்கு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். பிறகு மண்ணின் தன்மைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.
உழவு செய்யும் போது அடியுரமாக எக்டருக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 160 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும்.
விதை நட்ட 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுக்கும் போது வளமான செடிகளை குத்துக்கு ஒன்று வீதம் விட்டு மற்றவற்றைக் கலைத்து விடவேண்டும்.
வண்டுகள் மற்றும் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
விதைத்த 60 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகிவிடும். கிழங்குகளில் வட்டமான வெண்மை நிறக்கோடுகள் முழுவதும் பரவுவதற்கு முன்பாக அறுவடை செய்யவேண்டும்.
எக்டருக்கு 20-25 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.
