தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் வெள்ளரிக்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதி சீலையம்பட்டியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நெற்பயிர் விவசாயமும், வாழை, தென்னை, பூக்கள், வெற்றிலைக்கொடி ஆகியவை பி.டி.ஆர். கால்வாய் மூலம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றுப் பாசனத்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் வருடந்தோறும் பெரும்பான்மையான நாட்களில் தொடர்ந்து நடைபெறும் வெள்ளரிக்காய் விவசாயத்தில் அதிகம் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளரி பயிரிட்ட 3ம் நாளிலிருந்தே அறுவடை செய்யப்படுகிறது. முதல் ஒரு வாரத்துக்கு விளைச்சல் குறைந்தும், அதன் பின் ஒரு மாதம் வரையில் நல்ல விளைச்சலும் கிடைக்கிறது. ஏக்கருக்கு குறைந்தது 150 செடிகளில் 125 முதல் 150 கிலோ வரையில் அறுவடை செய்யப்படுகிறது.
கிலோ ரூ.40 என மொத்த விலையாக வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலமாக நாள்தோறும் சராசரியாக ரூ.5,000 வரையில் வருமானம் கிடைக்கிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் வெள்ளரி விவசாயம் சீலையம்பட்டியில் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியது: ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரையில் அதாவது பாத்தி அமைக்க, விதை உரம், பூச்சி மருந்து, பராமரிப்பு என செலவாகும். குறைந்த அளவு பாசன நீரில், தினமும் முறையாக பராமரிப்பு செய்தால் பயிரிட்ட 3ம் நாளிலிருந்து ஒரு மாதம் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும். பிஞ்சு வெள்ளரிக்காய்களை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். கேரளா மாநிலத்தை சோ்ந்தவா்கள் வெள்ளரிப் பழத்தை அதிகமாக வாங்கிச் செல்கின்றனர் என்றார் அவர்.
