தமிழ்நாடு மழை மறைவு மாநிலம். சராசரியாக 920 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையே கிடைக்கிறது. நீர்வளத்துக்கு அண்டை மாநில ஆறுகளையே பெரிதும் நம்பியிருக்கிறோம். நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் பயிர் முறையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நல்லதொரு வாய்ப்பு. ஒரு ஏக்கர் கரும்புப் பயிருக்குத் தேவையான நீரைக்கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய முடியும். மேலும், இது சொட்டு நீருக்கு உகந்த பயிர்.
16-வது நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியர்களால் மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஓராண்டுப் பயிர். தமிழகத்திலும் கேரளத்திலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொழிற்சாலை மூலப்பொருளாகவும் உணவாகவும் மரவள்ளி பயன்படுகிறது. வறட்சியைத் தாங்கி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவைத் தரும் பயிராக உள்ளது. அதனால், மரவள்ளிக் கிழங்கை மண்ணுக்குள் இருக்கும் வைரம் என்கிறார்கள்.
மானாவாரி சாகுபடி
மரவள்ளிக் கிழங்கை மூலப்பொருளாகக்கொண்டு இயங்கும் ஜவ்வரிசி ஆலைகளும் ஸ்டார்ச் தொழிற்சாலைகளும் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ளன. கடந்த காலங்களில் 400 ஆலைகள் இயங்கிய நிலையில், தற்போது 200 மட்டுமே இயங்கி வருகின்றன. வாகன எரிபொருளான எத்தனால் தயாரிப்பதற்கு இது ஏற்றது. இந்தோனேசியா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக்குடன் மரவள்ளி ஸ்டார்ச்சை கலந்து எளிதில் மட்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை (Bio Degredible Plastic) தயாரிப்பது நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாட்டில், கொல்லிமலை, கல்வராயன் மலை, தாளவாடி போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மலைவாழ் மக்கள் இதை மானாவாரியில் சாகுபடி செய்கின்றனர். மரவள்ளிக் கிழங்கின் விலை சீராக இருப்பதில்லை. ஒரு டன் கிழங்கு விலை ரூ.3000 முதல் சில நேரம் ரூ. 10,000 வரை விற்கும். இதில் ஆதாயம் பெறுவோர் பெரும்பாலும் இடைத்தரகர்களே. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 32 சதவீதம்வரை ஸ்டார்ச் இருக்கும்.
தேவையற்ற கலப்படம்
மரவள்ளிக் கிழங்குக்கு நல்ல விலை கிடைக்காமல் இருப்பதற்கான முதன்மைக் காரணம் கலப்படம். கண்ணைப் பறிக்கும் விதத்தில் ஜவ்வரிசியும் ஸ்டார்ச்சும் இருந்தால் மட்டுமே நல்ல விலைக்குப் போகும். பழுப்பு நிறத்தில் இருந்தால் குறைந்த விலையே கிடைக்கும். வெள்ளை நிறம் வரவேண்டும் என்பதற்காகச் சலவை ஆலைகளில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைபோ குளோரைடு, கால்சியம் ஹைபோ குளோரைடு போன்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போகக் கந்தக அமிலமும் சேர்க்கப்படுகிறது. கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறம் கிடைக்கும் என்பதற்காக ஈவு இரக்கமில்லாமல் கலப்படம் செய்யப்படுகிறது.
மரவள்ளி மாவுக்குக் கூடுதலான விலை கிடைக்கும் என்பதால் அதனுடன் மக்காச்சோள மாவையும் சேர்த்துக் கலப்படம் செய்வதும் உண்டு. மக்காச்சோள மாவில் இருக்கும் மஞ்சள் நிறத்தை நீக்கவும், மேலே கூறப்பட்ட ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். இயற்கையாகத் தயாரிப்பவர்களும் நிலைப்புத்தன்மை காரணமாக, காலப்போக்கில் கலப்படம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தேவை மரவள்ளிக்கு ஊக்கம்
மரவள்ளிக்கிழங்கின் பட்டையில் ஹைட்ரோ சைனிக் அமிலம் Hydrocyanic Acid இயற்கையாகவே உள்ளது. இது சற்று விஷத்தன்மை கொண்டது. மற்றச் சையனைடுகளை போலக் கொடிய விஷம் அல்ல. அந்தக் காலத்தில் இந்த மேல் பட்டையைச் சீவி எடுத்துவிட்டுக் கிழங்கை அரைத்துவந்தார்கள். ஆள் பற்றாக்குறையின் காரணமாகக் கிழங்கை அப்படியே அரைத்து, பழுப்பு நிறத்தைப் போக்குவதற்காகப் பல்வேறு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது. இன்று பெரும்பாலான ஜவ்வரிசி ஆலைகளில் ரசாயனம் பயன்படுத்தப்படுவதால் அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள், சுற்றுப்புற மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
இந்தக் கலப்படம் அதிகமானதன் காரணமாகத் தேசிய அளவில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் நுகர்வு வெகுவாகக் குறைந்து போனது. காகிதத் தொழிற்சாலைகளும் ஜவுளி ஆலைகளும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தரமான ஸ்டார்ச்சை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இறக்குமதியாகும் ஸ்டார்ச்சுக்கு குறைந்த அளவிலான இறக்குமதித் தீர்வையே விதிக்கப்படுகிறது.
பொதுவாக ஜவ்வரிசி, ஸ்டார்ச்சினுடைய இயற்கையான நிறம் வெளிர் மஞ்சள். தரத்தை நிர்ணயம் செய்வது ஒளிரும் வெண்மையல்ல என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எனது நிலம் களிமண் பாங்கான மண்வகையினைச் சார்ந்ததாகும். இதில் நான் மரவள்ளி சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க முடியுமா?
களி மண் வகைகளில் மரவள்ளி சாகுபடி செய்தல் கூடாது. எனெனில் கிழங்கு வளர்ச்சி குன்றி குறைந்த கிடைக்கும். எனவே மணற்பாங்கான இரும் பொறை மண் வகைகளில் சாகுபடி செய்தல் சிறந்ததாகும்.
மரவள்ளி/சேகோ ஆலைகளில் கிடைக்கும் மரவள்ளி கிழங்கு பட்டைகளை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தலாமா?
அவ்வாறு கிடைக்கும் கிழங்கு பட்டைகளை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். அவ்வாறு உலர்த்தும் போது அதனின் உள்ள நஞ்சு பொருள் (ஹரோசைனிக் அமிலம்) அழிக்கப்பட்டு கால்நடைகளுக்கு எந்தவித தீங்குகளையும் ஏற்படுத்துவதில்லை.
எனது மரவள்ளி வயலில் பெரும்பால செடிகளில் இலைகள் சுருங்கியும், வெளிறிய நிறத்துடனும் காணப்படுகின்றது. இது நன்மையா? தீங்கு ஏற்படுத்துமாயின் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
இலைகளின் சுருக்கமானது மரவள்ளியின் ரைவஸ் நோய் தாக்குதலாகும் இந்நோய் வெள்ளை ஈகள் மூலம் பரப்பப்படுகின்றது. எனவே முதற்கட்டமாக வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 2மிலி/ லிட்டர் தெளிக்க வேண்டும். மேலும் நடவின் போது நோய் தாக்கப்படாத செடிகளிலிருந்துகருணை எடுத்து நடவு செய்ய வேண்டும்.
ஒரு எக்டர் நடவு செய்ய எவ்வளவு கருணைகள் தேவைப்படுகின்றன.
17,000
நான் மானாவாரியில் மரவள்ளி சாகுபடி செய்ய விரும்புகின்றேன். ஏதேனும் உக்திகள் உண்டா?
கருணைகளை நடவிற்கு முன் பொட்டாசியம் குளோரைட் @ 5 கிராம்/லிட்டர் மற்றும் நுண்ணூட்டங்களான துத்தநாகம் மற்றும் தாமிர சல்பேட் @ 0.5% கலவையில் 20 நிமிடம் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும்.
மகசூல்
240 நாட்களில் எக்டருக்கு 15-20 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.
ஊடுபயிர்
வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, துவரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.
