சாத்துக்குடி சிட்ரஸ் வகையைச் சேர்ந்த அமிலத் தன்மை இல்லாத பழமாகும்.சாத்துக்குடியானது தற்போது இந்தியாவில் பரவலாக பயிர் செய்யப்பட்டு வருகிறது.
இரகங்கள் :
ரங்காபுரி, நாட்டு வகைகள் ஆகியவை சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.
மண்
தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரளைமண் நிலங்கள் ஏற்றவை. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது 20 அடிக்கு 20 அடி இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். குழியில் ஒரு கூடை எரு மற்றும் மேல்மண் ஆகியவற்றைக் கலந்து இட்டு 15 நாட்கள் ஆறப்போட வேண்டும்.
விதை
குருத்து ஒட்டு செய்த செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
விதைத்தல்
நாற்றின் ஒட்டுப்பகுதி தரைக்கு மேல் அரையடி உயரத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க நீளமானக் குச்சியை ஊன்றி செடியுடன் இணைத்துக் கட்ட வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்டவேண்டும். செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
உரங்கள்
இயற்கை உரமாக ஒரு எக்டருக்கு டன் எரு, 300 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாகக் கலந்து, ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்துக்கு முன்பாகக் கொடுக்க வேண்டும்.
ஐந்து வயது மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும், அதற்கு மேல் வயதுள்ள மரங்களுக்கு 5 அடி இடைவெளியிலும் இரண்டு அடி அகலத்துக்கு வட்டப்பாத்தி எடுத்து மேற்கண்ட கலவையில் ஒவ்வொரு மரத்துக்கும் 10 கிலோ அளவுக்கு வைக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மரத்தில் இடைஞ்சலாக இருக்கும் கிளைகளை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.
நூற்புழு தாக்குதல்
நூற்புழுக்களின் தாக்குதல் இருந்தால் மரம் ஒன்றுக்கு சூடோமோனஸ் புளூரசன்ஸ் மருந்தை 20 கிராம் வீதம் மரத்திலிருந்து 50 செ.மீ தள்ளி 15 செ.மீ ஆழத்தில் இடவேண்டும்.
இலைச்சுருட்டுப் புழு
இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் காணப்பட்டால் பென்தியான் ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். வேப்பங்கொட்டைச்சாறு 6 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
சிற்றிலை நோய்
சிற்றிலை நோய் காணப்பட்டால் ஒரு சத சிங்க் சல்பேட் மருந்தை, ஒரு மில்லி டீப்பாலுடன் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து புதிய தளிர்கள் விடும்போதும், பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகும், பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் தருணத்திலும் தெளிக்க வேண்டும்.
அறுவடை
செடி நடவு செய்த 5-ம் ஆண்டில் பூவெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும்.
சாத்துக்குடியில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூ எடுத்து, ஏப்ரல்-மே மாதங்களில் இடைப்பருவ மகசூலும்; ஜூன்-ஜூலை மாதங்களில் பூ எடுத்து, செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் முழு மகசூலும் கிடைக்கும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 30 டன் பழங்கள் வரை கிடைக்கும்.
