கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்க வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு நிதியுதவியுடன், தமிழ்நாடு வேளாண்மைத் துறை வாயிலாக, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் 450 எக்டர் பரப்பில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க, 2 கோடியே ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில், 550 எக்டர் பரப்பில், ரூ.350 லட்சத்தில் மானியம் வழங்கிட, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் அரசு வழிகாட்டுதல்படி வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு ஏற்றவாறு, சொட்டுநீர் பாசனம் அமைக்க, அரசு நிர்ணயித்த மானியம் போக, மீதி தொகையை வரைவு காசோலையாக, சொட்டு நீர் பாசன நிறுவனத்துக்கு செலுத்தி, முழுமையான பாசன அமைப்பு அமைத்துக் கொள்ளலாம். இத்தகவலை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களின் உதவி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
