அன்னவாசல் அருகே காலாடிப்பட்டி, வீரப்பட்டி, சென்னப்பநாயக்கன்பட்டி, புதூர், குளவாய்ப்பட்டி, குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அறுவடை தொடங்கியுள்ளது.
வழக்கமாக, நிலக்கடலையை எண்ணெய் ஆலைக்காக ஏஜென்டுகள், விவசாயிகளை நேரடியாக சந்தித்து கொள்முதல் செய்வர். நடப்பாண்டில் நிலக்கடலை நல்ல விளைச்சல் உள்ளதால், விவசாயிகளே நேரிடையாக பொதுமக்களிடம் நிலக்கடைலையை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கிராம சந்தைகள் மற்றும் தெருவோரப் பகுதிகளில், மண் நீக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலையை விவசாயிகள், வியபாரிகள், சரக்குவாகனம், இருசக்கர வாகனம், தள்ளுவண்டி, சைக்கிள் போன்ற வாகனங்களில் கூவி, கூவி விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து, அன்னவாசல் விவசாயிகள் கூறும்போது, தற்போது, நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் ஆலைக்கான ஏஜென்டுகள் நிலக்கடலை கேட்டு அதிகம் வரவில்லை. ஒரு சிலர் வந்தாலும், குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால், பொதுமக்களிடம் நேரிடையாக சென்று விற்பனை செய்கிறோம். படி ஒன்று ரூ.20-க்கும், 3-படி ரூ.50-க்கும் விற்பனை செய்கின்றோம் என்றார்.
