மணில்காரா அக்ரஸ் என்பது இதன் தாவரவியல் பெயர். இது சப்போட்டேசியோ குடும்ப வகையினைச் சேர்ந்தது. சப்போட்டா ஒரு வெப்ப மண்டல பழப்பயிர். இந்தப் பயிர் அனைத்து வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடியது. இதனை 1000 மீட்டர் உயரம் வரை உள்ள நிலங்களில் சாகுபடி செய்யலாம்.
இரகங்கள்
சப்போட்டாவில், கோ1, கோ2, கோ3, பி.கே.எம்1, பி.கே.எம்2, பி.கே.எம்3, பி.கே.எம்4, பி.கே.எம்.5, கிரிக்கெட் பால், ஓவல் பாராமசி, தகரக்குடி, கீர்த்தபாரத்தி, பாலா, காளிப்பட்டி, மற்றும் துவாரப்புடி ஆகிய ரகங்கள் உள்ளன. ஒட்டுக்கன்றுகளும் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
நடவுச் செடி தேர்வு
பலாவேர் செடியில் ஒத்து கட்டிய 2 அல்லது 3 கிளைகளைக் கொண்ட ஒட்டுச் செடிகள் நடவுக்கு ஏற்றவையாகும். சப்போட்டாவுக்கு ஜூன், நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவமாகும்.
இடைவெளி
- இதற்கான குழிகளை 1 மீட்டருக்கு 1 மீட்டர் என்ற அளவில் 8 மீட்டர் இடைவெளியில் வெட்டவும். ஒரு குழிக்கு 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு, மேல் மண், 100 கிராம் லிண்டேன், 1.3 சதவீத சதத்தூள் ஆகியவைகளை கலந்து இட்டு குழிகளை நிரப்ப வேண்டும்.
- பின்பு ஒட்டுச் செடிகளை சட்டியில் இருந்து பிரிக்கும் போது வேர்ப் பகுதியில் உள்ள மண் சிதைந்து விடாமல் குழியின் நடுவில் சிறிய பள்ளம் எடுத்து அதனுள் செடியை வைத்து செடியைச் சுற்றி மண்ணைத் தள்ளி நன்றாக அணைக்க வேண்டும்.
- நடவு செய்யும்போது ஒட்டுப் பகுதி தரைமட்டத்தில் இருந்து 15 சென்டி மீட்டர் உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். செடிகள் காற்றில் சாய்ந்து விடாமல் இருக்க செடிகளுக்கு பக்கவாட்டில் 2 குச்சிகளை வைத்து சணல் போன்ற மெதுவான கயிறு கொண்டு கட்டி விட வேண்டும்.
உரமிடுதல்
முதல் வருடத்தில் தொழுவுரம் 10 கிலோ, தழைச்சத்து 200 கிராம், மணிச் சத்து 200 கிராம், சாம்பல் சத்து 250 கிராம் ஆகியவற்றை கலந்து இட வேண்டும். ஆண்டு தோறும் இதே அளவில் உரமிட வேண்டும். ஆறாவது ஆண்டில் 50 கிலோ தொழு உரம், தழைச்சத்து 1 கிலோ, மணிச்சத்து 1 கிலோ, சாம்பல் சத்து 1.5 கிலோ என்ற அளவில் உரமிட வேண்டும்.
பின்செய் நேர்த்தி
வேர்ச் செடி கிளைகளை நீக்க வேண்டும். குறுக்கு நெடுக்காக செல்லும் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மகசூலை அதிகரிக்க 0.1 சதவீதம் போரிக் அமிலத்தை தெளிக்க வேண்டும்.
ஊடுபயிர்
சப்போட்டா காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக பயிறு வகைப் பயிர்கள், காய்கறி பயிர்களை பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பயிர் பாதுகாப்பு
இலை சுருட்டுப் புழு தாக்கினால் மோனோ குரோட்டோபாஸ் 2 மில்லி அளவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதே அளவில் தேவைப்படும் அளவுக்கு தெளிக்கலாம்.
மொட்டுப் புழு, கம்பளிப் புழு
இதற்கும் மோனோ குரோட்டோபாஸ் 2 மில்லி அளவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
கரிப்படலம் நோய்
ஒரு கிலோ மைதாவை 4 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் கலக்க வேண்டும். பின்னர் அதை பரவலாகத் தெளிக்க வேண்டும்.
அறுவடை
- ஒட்டுச் செடிகள் நட்ட 3 முதல் 4 வருடங்களில் பலன் கொடுக்கத் தொடங்கும். அறுவடையை பிப்ரவரி, ஜூன் மாதங்களிலும், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் செய்யலாம்.
- பழங்களை பழுக்க வைப்பதற்கு 10 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு மாத்திரையை எத்ரல் 5000 பிபிஎம் கலவையுடன் கலந்து காற்று புகாத அறையில் வைக்க வேண்டும். விவசாயிகள் இந்த முறைகளை முழுமையாகக் கையாண்டால் ஆண்டுக்கு 15 முதல் 25 டன் வரையில் மகசூல் கிடைக்கும்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை
