width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்




வருடம் முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம்.

நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.

மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.

பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.

இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.

பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.

நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.

இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம்.

எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம்.

மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.




தற்போதைய செய்திகள்