width:1200px height:628px செய்திகள்

கோடை மாம்பழ சீசன் விலையின்றி விவசாயிகள் தவிப்பு




திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கோடை மாம்பழ மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது பொதுமுடக்கம் காரணமாக கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தொடங்கும் கோடை மாம்பழ சீசன் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

ஆழ்வார்குறிச்சி, களக்காடு ஆகிய பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் மாமர தோட்டங்கள் உள்ளன. செந்தூரம், நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகின்றன. கோடை சீசனில் முதலில் செந்தூரமும், பங்கனப்பள்ளியும் விற்பனைக்கு வரும் இறுதியாக தான் நீலம் வகை விற்பனைக்கு வரும்.

நிகழாண்டில் செந்தூரம், அல்போன்சா ஆகிய ரகங்கள் மிகவும் அதிகளவில் குவிந்துள்ளன. இவை அதன் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை சில ரகம் கிலோ ரூ.50க்கும் விற்பனையாகின்றன. நிகழாண்டில் கோடை மாம்பழ சீசனில் மகசூல் அதிகமாக உள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காமல் தவிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மா விவசாயிகள் கூறியது: மாமரங்களுக்கு டிசம்பர் மாதத்தில் அதிகளவில் தண்ணீர் கிடைத்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூ பிடித்து காய்களாக மாறத்தொடங்கும். இம் மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்ததால் மாமரங்களில் காய்களின் விளைச்சல் மிகவும் அதிகமாக உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மாங்காய்கள் கிடைக்கின்றன.

இப்பருவத்தில் பழமாக மாற்றாமல் காயாக தமிழகத்தின் அனைத்து சந்தைகளுக்கும் வியாபாரிகள் அனுப்புகிறார்கள். கோடை மாம்பழ சீசனை காட்டிலும் இந்த இடைப்பருவ காய்ப்பின்போது வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. 10 வயதுடைய ஒரு மரம் குறைந்தபட்சம் 60 நாள்களில் 200 கிலோ மாங்காய் காய்க்கும். அதுவே நிகழாண்டில் 250 கிலோ வரை அதிகரித்துள்ளது. கரோனா பொதுமுடக்கம் மா விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. கோடை மாங்காய் சீசனில் கிலோ ரூ.20 முதல் ரூ.30க்கு தோட்டங்களில் கொள்முதல் செய்யப்படும். சந்தைகள் இல்லாததாலும், போக்குவரத்து தடையாலும், கடைகள் முழுமையாக திறக்கப்படாததாலும் மாங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கிளிமூக்கு உள்ளிட்ட ரகங்கள் கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யப்பட்டு சந்தைகளில் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தாலும், தகுந்த விலை இல்லையே என்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்றனர்.

மாம்பழ வியாபாரிகள் கூறியது: கரோனா பொதுமுடக்கத்தால் சேலம், தேனி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் வரத்து குறைந்துள்ளது. அதனால் இறக்குமதி ரகங்களின் விலை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் உள்மாவட்ட மாங்காய் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலையின்மையால் விவசாயிகள் நேரடியாகவே கிராமம்தோறும் சென்று விற்பனை செய்து வருகிறார்கள் என்றனர்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் மாம்பழ மகசூல் நன்றாக உள்ளது. மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் தோட்டக்கலைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் தோட்டங்களில் விளையும் பொருள்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்ல உரிய அனுமதிச்சீட்டுகள் தோட்டக்கலைத்துறை மூலம் பெற்றுத் தரப்படுகிறது. இதுதவிர சரக்கு வாகனங்களுக்கும் பொதுமுடக்கத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL