width:1200px height:628px செய்திகள்

உரிய விலையின்றி தவிக்கும் பலா விவசாயிகள்




பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 900 ஏக்கர் பரப்பில் பலா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டுமே பலா சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்திலேயே பண்ருட்டி பலாவுக்கு என தனி ருசி உண்டு. இங்கு பெரும்பாலும் மழை நீரைக் கொண்டே பலா மரங்கள் காய் பிடிப்பதால் நல்ல ருசியும், சந்தைகளில் தனி விலையும் உண்டு.

2020ம் ஆண்டு பலா அறுவடையின்போது கொரோனா பொது முடக்கத்தால் விற்பனை சரிந்தது. நிகழாண்டிலும் பலா விற்பனை கடுமையாக முடங்கியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பலா அறுவடை செய்யப்படும். ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் அறுவடை ஜூலை மாதம் வரை நடைபெறும். தற்போது, கொரோனா பொது முடக்கத்தால் சிறு வியாபாரிகளால் தள்ளுவண்டிகளில் வைத்து பலாப் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பழக் கடைகள் திறக்கப்படாதது, போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பலாப் பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால், மரங்களிலேயே பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்ருட்டி பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது : பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களை அறுவடைக்கு முன்பே வியாபாரிகள் விலை பேசி முன்பணம் கொடுத்துச் செல்வார்கள். இங்கு அறுவடையாகும் பழங்கள் பெரும்பாலும் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகும். உள்ளூரிலும் சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையாகும். தற்போது, கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் இ-பதிவு பெற்று வாகனங்களில் வருவதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

மரங்களில் அறுவடை செய்து எடுத்துச் செல்லும் பழங்களுக்கு வியாபாரிகள் தரத்துக்கேற்ப ரூ.150 முதல் ரூ.200 வரை விலை வழங்கிய நிலையில், தற்போது ரூ.70க்கு கூட வாங்க முன்வரவில்லை. பழம் பழுத்துவிட்டால் 3 நாள்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது.

ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கு பலாப் பழங்கள் ஒரு டன் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஒரு டன் ரூ.15,000 என உள்ளூரில் கூட விலை போகவில்லை. இதனால், சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் மிகப் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் தற்போது 900 ஏக்கரில் பலா சாகுபடி நடைபெறுகிறது. ஓர் ஏக்கரில் 40 மரங்கள் வளர்க்கலாம். ஒரு மரத்தில் அதிகபட்சம் 70 முதல் 80 பழங்கள் வரை அறுவடை செய்யலாம். மாவட்டத்தில் சராசரியாக ஏக்கருக்கு 20 முதல் 25 டன்கள் வரை பலாப் பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வரை 70 சதவீதம் அறுவடை முடிந்துவிட்டது. உள்ளூரில் வியாபாரம் செய்வதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.




தற்போதைய செய்திகள்


Could not connect to MySQL