width:1200px height:628px செய்திகள்

கரும்பில் காட்டு எலிக்கு வேட்டு
கரும்பில் எலி, யானை, காட்டுப்பன்றி, நரி என பல வகை முதுகெலும்பிகள் கரும்பை தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நிலவி வரும் இக்கோடையில் விழுப்புரம் மாவட்டம் பை.

சேத்தூர் மற்றும் பையூர் ஆகிய கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிரில் எலிகளின் தாக்கம் அதிகளவில் உள்ளது. நமது இந்தியாவில் 18 வகையான எலிகள் பயிர்களை தாக்கி சேதபடுத்துவதுடன், உணவு தானியங்களையும் வீணாக்குகிறது. அவற்றில் வரப்பு எலிகள் கரும்பை அதிக அளவில் தாக்கும்.

இவை அடர்ந்த சாம்பல் நிறத்துடன் 400 கிராம் எடை வரை வளரும். இவ்வகை எலிகள் 5 அடி ஆழம் வரை குழிகளை தோன்றி ஒரு இனப்பெருக்க சுழற்சியில் 6 முதல் 8 குட்டிகளை ஈனும். ஒரு வருடத்தில் ஒரு ஜோடி எலியானது 3000 குட்டிகளை ஈனும் தன்மை கொண்டது. எலிகள் வயலின் ஓரத்தில் உள்ள கரும்பை வட்ட வடிவிலும் மற்றும் கரும்பின் அடிப்பகுதியில் உள்ள கணுவிடை பகுதிகளை அதிகம் தாக்குவதால் கரும்பு சாய்வதுடன் , கடித்த பகுதியில் இரண்டாம் நிலை பூஞ்சன தொற்று ஏற்பட்டு கரும்புகள் அழுகி வீணாகிவிடுகிறது. ஆதலால் இத்தகைய சேதம் விளைவிக்கும் காட்டு எலிகளை எளிதாக கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கட்டுப்படுத்தும் முறைகள்

இயற்கை முறைகள்

வயல்களில் கோடை காலங்களில் ஆட்டுக்கிடை அமர்த்த வேண்டும்.
வயலின் வரப்புகளை சிறியதாகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பசும் சாணத்தை குவியலாகவோ அல்லது நீரில் கரைத்தோ வயலின் வரப்புகளில் இட வேண்டும்.
பப்பாளி காயை(பால் வரும் தருணத்தில் இருக்க கூடியவை) தோல் சீவி மைசூர்பாக் போன்று சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாழை இலையில் வைத்து இரவு நேரங்களில் வயலை சுற்றி வரப்புகளில் வைக்கலாம்.
ஆந்தை உட்காருவதற்கான 40-50 கம்பங்கள்(அ)குச்சிகள் /எக்டர் அமைத்தல்.
உரிய காலத்தில் கரும்பின் தோகையை உரித்து விட்டம் கட்டி பயிர்கள் சாய்வதை தடுக்க வேண்டும்.
எலி வேட்டை மற்றும் எலி துரத்துதல் போன்ற செயல்களால் நல்ல கட்டுப்பாடு ஆகும்.

நச்சு உணவு தயார் செய்தல்
அரிசியை 4 முதல் 5 மணி நேரம் நன்றாக ஊற வைத்து, பின்பு தண்ணீரை வடித்து விட்டு, ஊறிய அரிசியுடன் குருணை மருந்தை கலந்து வைக்கவேண்டும். (அரிசிக்கு பதிலாக மக்காச்சோளமும் பயன்படுத்தலாம்)
வேர்க்கடலை அல்லது கருவாடுயை நன்றாக வறுத்து பொடி செய்து அதனுடன் சம அளவில் சிமெண்ட் கலந்து உருண்டையாக பிடித்து வயலின் வரப்புகளில் வைக்கலாம்.
தேங்காய் பிண்ணாக்கை நன்றாக பொடியாக்கி அதனுடன் சம அளவு குருணை மருந்து மற்றும் சிமெண்ட் கலந்து வைத்து நல்ல பலன் பெறலாம்.
நச்சுப் பொறியாக 1 பகுதி “ஜின்க் பாஸ்பைடு அல்லது புரோமோடையலோன் 0.005 சதவிகிதத்துடன் 49 பகுதிகள்(1:49) பொரிக்கப்பட்டசோளம்/அரிசி/ காய்ந்த மீன்/ கலந்து வைக்க வேண்டும்.

புகையூட்டுதல்
எலிகளால் உருவாக்கப்பட்ட பொந்துகளைக் கண்டுபிடித்து, அதில் 2 மாத்திரைகள் ஒவ்வொன்றும் 0.5 அல்லது 0.6 கிராம் அலுமினியம் பாஸ்பைடை ஒரு பொந்துக்குள் முடிந்த வரை ஆழமாகப் போட்டு எலி நுழையும் வழியை சேற்று உருண்டையால் அடைத்துவிட வேண்டும்.

குறிப்பு: இவற்றில் எந்த முறை செய்தாலும் கைகளில் கையுறை அணிந்து செய்ய வேண்டும். செய்யும் போது வியர்வை மற்றும் முடிகள் படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

 
தற்போதைய செய்திகள்