width:px height:px மேலாண்மை செய்திகள்

கொய்யாவில் உற்பத்தியை மேம்படுத்தும் தொழில் நுணுக்கங்கள்
குறைந்த முதலீடு செய்து நல்ல லாபத்தை தரக்கூடிய பழவகைகளில் கொய்யாவும் ஒன்று. கொய்யா அனைத்து வகையான சூழ்நிலைகளையும் தாங்கிவளரக் கூடிய ஒரு பழப்பயிர். இது வெப்ப மண்டலப் பகுதிகள், மழை குறைவான பகுதிகள், உப்பு மிகுந்த, மற்றும் வளமில்லாத மண், நீர் தேங்கிய நிலம், வறண்ட நிலம் போன்ற சூழ்நிலைகளில் தாங்கி வளரக் கூடியது. எனினும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலத்தில் விளைச்சல் மற்றும் மகசூல் நன்றாக இருக்கும். கொய்யா வருடத்தில் இரு முறை காய்க்கும்.

வடிவமைப்பு
வடிவமைப்பு காய்ப்புக்கு வரும் முன் செய்யப்படுவதாகும். பொதுவாக வடிவமைத்தல் செய்யும் போது 3 அடி வரை கிளைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டு அதன் பின்னர் மரத்தின் அனைத்து திசைகளிலும் கிளைகள் 1 அடி முதல் 2 அடி இடைவெளியில் இருக்குமாறு வடிவமைத்தல் அவசியமாகும். இவ்வாறு செய்வதனால் காய்க்கும் காலங்களில் எவ்வித இடையூறுமின்றி பின் செய் நேர்த்திகளை செவ்வனே செய்யலாம். மேலும், அறுவடை, பூச்சி மருந்து தெளித்தல் எளிதாக மேற்கொள்ளலாம்.

கவாத்து செய்தல்

கொய்யாவில் எளிதாக பூச்சி மருந்து தெளிக்க, அறுவடை செய்ய, அனைத்து கிளைகளிலும் பூ பூத்து காய் காய்க்க, நல்ல மகசூல் பெற கவாத்து செய்வது மிக அவசியம். கொய்யா பயிர் அடிப்படையில் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதால், ஆணி வேர் உண்டாவதில்லை. பூமிக்கு மேலும் மரம் செங்குத்தாக வளர்வதில்லை. எனவே, ஒரு சரியான கட்டமைப்பு ஏற்படுத்த, ஆரம்ப காலங்களில், தரை மட்டத்திலிருந்து சுமார் 1 மீட்டர் உயரம் வரை கிளைகள் விரியாமல் பார்த்துக்காள்ள வேண்டும். பின்னர் 3 அல்லது 4 கிளைகள் மட்டும் சரியான இடைவெளியில் அனுமதிக்கலாம். மரம் உறுதியாக மண்ணில் நிற்கும் வரை, சுமார் 1 மீட்டர் உயரம் கொண்ட வலுலான குச்சிகளை செடிகளின் அருகில் நட்டு, செடிகளோடு சேர்த்து கூட்டவும். இதன் மூலம் செடிகள் காற்றின் வேகத்தில் ஒடிந்து விடாமல் பாதுகாக்கலாம். பின்னர் செடிகளின் அடிப்பக்கத்தில் அவ்வப்போது தோன்றும் கிளைகளை நீக்கி விட வேண்டும். இன்றேல், செடிகளின் வளர்ச்சி பாதிக்கும். மேலும் ஒரு பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன் வறண்ட, மற்றும் உபயோகமில்லாத குச்சிகளை நீக்கி விட வேண்டும். கொய்யா எப்போதம் நடப்பு பருவத்தில் தோன்றும் இளந் தண்டுகளிலேயே பூப்பதால், அதிக அளவு புதிய தளிர்கள் தோன்றுமாறு கவாத்து செய்தல் வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பொதுவாக கவாத்து செய்தல் வேண்டும்.

உற்பத்தியை மேம்படுத்தும் தொழில் நுணுக்கங்கள்
மரங்களை வளைத்துக் கட்டுதல்

ஓரளவு வயதான மரங்களில் (சுமார் 10 முதல் 15 வருடங்கள் கிளைகள் ஓங்கி உயரமாக வளர்ந்து, உற்பத்தி குறைந்து விடும். இதனைச் சரி செய்ய, மேற்படி கிளைகளை வளைத்து, அவற்றின் நுனி பாகத்தை மண்ணுக்குள் ஒரு அடி ஆழத்தில் பதித்து, அதன் மேல் கல் போன்றவற்றை வைத்து, அவை மேலே கிளர்ந்து வராமல் செய்யலாம். அல்லது முன்பே மண்ணில் பதிக்கப்பட்ட கனமான குச்சிகளோடு சேர்த்துக் கட்டலாம். இதன் மூலம் கிளைகளின் கணுக்களில் உள்ள மொட்டுகள் தூண்டப்பட்டு பூக்கள் மலர்ந்து கனிகள் உற்பத்தி பெருகிறது.

மரங்களை மட்டம் தட்டுதல்

மிக வயதான, உற்பத்தி திறன் இழந்த மரங்களை, தரை மட்டத்திலிருந்து 30 செ.மீ உயரத்தில், மட்டம் வெட்டி விட வேண்டும். பின்னர் அவற்றிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றி, காய்கள் பிடிக்கும். உற்பத்தி மேம்படும்.

நுண்ணூட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவர்த்தி

பல்வேறு நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் கொய்யா பயிரில் காணப்படுகின்றன. துத்தநாகச் சத்து குறைபாட்டினால் நரம்புகளுக்கிடையே மஞ்சள் நிறமாதல், இலைகள் சிறுத்தல், கணுக்களிடையே இடைவெளி குறைந்து செடிகள் குத்துச் செடிகள் போல தோற்றம் தருதல் என விளைவுகள் விரிகின்றன. நீர் வடிதல் வசதியற்ற நிலங்களில் இக்குறைபாடு பெரிதும் காணப்படுகிறது. 560 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 350 கிராம் சுண்ணாம்பு இரண்டையும் 72 லிட்டர் நீரில் கரைத்து, மரங்களின் மேல் இரண்டு முறை 15 முதல் 30 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் இக்குறைபாடு நிவர்த்திக்கப்படுகிறது.

துத்தநாகம் தவிர மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடும் சில நேரங்களில் காணப்படுவதுண்டு, இலைகள் வெளிர்தல், ஓரங்கள் தீய்ந்த தோற்றம். சிறுத்துப்போதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதனை நிவர்த்தி செய்ய 25 கிராம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீஸ் சல்பேட் மற்றும் 12.5 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் 12.5 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து, இலைகளின் மேல் கீழ்கண்டவாறு நான்கு முறை தெளித்தல் வேண்டும்.

1.புதிய தளிர்கள் தோன்றும் போது 2. ஒரு மாதம் கழித்து மறுமுறை 3. பூக்கும் தருணம் 4. காய் பிடிக்கும் தருணம்

மேலே கூறிய நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் தவிர, போரான் சத்து பற்றாக் குறை பரவலாக அதிகளவில் காணப்படுகிறது. இக்குறைபாடுள்ள மரங்களிலிருந்து பெறப்படும் பழங்கள் சரியான வளர்ச்சியின்றி, சிறுத்துவிடும். மேலும் அவை முறையாக கனிவதில்லை. பழங்கள் சில நேரங்களில் வெடித்தும் காணப்படும். 0.3 சத போராக்ஸ் (1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் போராக்ஸ் மருந்தை கரைக்க வேண்டும். மருந்தை தெளிப்பதன் மூலம், இக்குறைபாட்டை களையலாம்.

விதையுள்ள கொய்யா இரகங்களில் அதிகளவு விதைகள் இருப்பின், அவை சந்தையில் குறைந்த விலையே பெறுகின்றன. விதைகளின் எண்ணிக்கையை குறைத்து, தரத்தை மேம்படுத்த சிப்பாலிக் அமிலம் 100 பி.பி.எம் என்ற அளவில் ( 1 லிட்டர் நீருக்கு 100 மில்லி கிராம் மலராத பூ மொட்டுகளின் மீது தெளிக்கலாம். அல்லது பூ மொட்டுக்களை மேற்சொன்ன திரவத்தில் நனைத்து எடுக்கலாம்.
தற்போதைய செய்திகள்