width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

தரமான வெங்காய விதை உற்பத்திக்கு கலவன்களை நீக்கி பராமரிக்க ஆலோசனை




சின்னவெங்காய விதை தேவைக்காக பயிர்களை பராமரிக்கும் போது, கலவன்களை நீக்குதல் உட்பட பணிகளில், கவனம் செலுத்த, விவசாயிகளுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, மூன்று சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. நடவின் போது, விதையின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு உட்பட காரணங்களால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தாங்களாகவே விதை உற்பத்தி செய்யும் நடைமுறையை துவக்கியுள்ளனர். சாகுபடியில், குறிப்பிட்ட பாத்திகள் மட்டும், பயிர்களை அறுவடை செய்யாமல், பூக்கள் வரும் வரை, பராமரிக்கின்றனர். பின்னர், பூங்கொத்திலிருந்து விதைகளை சேகரித்து, அடுத்த நடவு சீசனுக்கு பயன்படுத்துகின்றனர். சின்னவெங்காய விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, ‘உழவன்’ செயலி வாயிலாக, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, விதை தேவைக்காக, பராமரிக்கப்படும் பாத்திகளில், குறிப்பிட்ட ரகத்தின் குணாதிசியத்திலிருந்து மாறுபட்டு தெரியும், எல்லா பயிர்களையும், களைகளையும், அகற்ற வேண்டும். செடிகளின் உயரம், இலை, பூங்கொத்தின் நிறம், அமைப்பு மற்றும் பூக்களின் தன்மையை கொண்டு கலவன்களை நீக்கலாம். இவ்வாறு, செய்வதின் மூலம், உண்மையான விதை நல்ல தரமானதாக கிடைப்பதுடன், ரகத்தின் பாரம்பரிய தன்மைகளை பாதுகாக்கலாம். விதை அறுவடை தருணத்தில், பூங்கொத்தில், 50 சதவீத கருப்பு விதைகள் வெளியே தெரியும். அச்சமயத்தில், பூங்கொத்துகளை மட்டும், அறுவடை செய்து, சாக்கு பைகளின் மீது பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்