நிலத்தை நன்கு சமப்படுத்த முடியாத காரணத்தால் முறையற்ற நீர் விநியோகம் மற்றும் மண்ணின் சீரற்ற ஈரப்பதம் காரணமாக பயிர்களின் முளைப்பு திறன் நிலைப்பாடு மற்றும் விளைச்சலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நிலத்தை சமன் செய்வதால் நீர் மண் மற்றும் பயிர் மேலாண்மைகளுக்கு உறுதுணையாக அமைகிறது. நிலத்தை துல்லியமாக சமன் செய்வதன் மூலம் நீர், உரம் மற்றும் இதர இடுபொருட்கள் பயிர்களுக்கு சமமாக வழங்கப்படுகிறது. நீர் மற்றும் உரப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் முடியும்.
தற்பொழுது காளை அல்லது டிராக்டர் மூலம் சமப்படுத்திகளை இணைத்து நிலமானது சமன் செய்யப்படுகிறது. ஆனால் துல்லியமாக சமன் செய்யப்படுத்த முடிவதில்லை. எனவே, இது பாசன நீரின் சீரற்ற நீர் விநியோகத்திற்கு வழி வகுக்கிறது. தற்போது லேசர் கருவி மூலம் சமன்படுத்தும் முறையானது நிலத்தை துல்லியமாக சமன் செய்வதற்கான ஒரு முன்னோடி தொழில் நுட்பமாக திகழ்கிறது. உணவு உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தித்திறனில் விரும்பிய வளர்ச்சி நிலைகளை அடைய இந்த லேசர் கருவி மூலம் சமன்படுத்தும் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றுகிறது. இதனால் நிலம் சமன் செய்வதற்கு முன் சட்டிக்கலப்பை, கொத்துக்கலப்பை மற்றும் சுழல் கலப்பை ஆகியவற்றை கொண்டு உழவு செய்யப்பட்ட பின் லேசர் சமன்படுத்தி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியில் லேசர் சமன்படுத்தியின் பகுதிகளாக லேசர் கடத்தி, கட்டுப்பாட்டு பகுதி, லேசர் கற்றை சேகரிக்கும் அமைப்பு, மண் இழுக்கும் வாளி அமைப்பு ஆகியவை உள்ளன. இந்த லேசர் கருவி மூலம் சமப்படுத்தும் தொழில்நுட்பத்தில் லேசர் கற்றைகளை நிலத்தில் வைக்கப்பட்டுள்ள முக்காலி அமைப்பின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் இந்த லேசர் கடத்தி சமன் செய்யப்பட வேண்டிய நிலத்தில் லேசர் கற்றையை அனுப்பி நிலத்தின் உயரத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்று தகவல் சேகரிக்கும் அமைப்பிற்கு அனுப்புகிறது. இந்த தகவல்களை கொண்டு கட்டுப்பாட்டு பகுதியானது டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள மண் இழுக்கும் வாளியை ஹைட்ராலிக் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்துகிறது.
தகவல் : முனைவர் ச.வள்ளல் கண்ணன் மற்றும் முனைவர் சீ.கிருஷ்ணகுமார், வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை.
