width:600px height:400px காய்கறிகள்

காலிஃபிளவர் சாகுபடி




காலிஃபிளவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் காலிஃபிளவர் ஒரு விவசாய பயிராக பரவியது.

அமெரிக்கர்களால் அதிகமாக உட்கொள்ளப்படும் காலிஃபிளவர் விவசாயத்தில் இன்று முதலிடம் வகிப்பது இத்தாலி.

தமிழ்நாட்டில் சமவெளியில், குளிர் காலங்களில் பயிர் செய்யலாம்.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

மலைப்பகுதிகளில் கீபாஜெயண்ட், பனிப்பந்து, செகண்ட் எரிலி, எர்லிகுன்வார்ஈ, செகண்ட் கரிலிகுன்வார், பூசாதபோலி ஆகிய இரகங்கள் ஏற்றவை. சமவெளிப்பகுதிகளுக்கு மார்வல், பாட்னா மீட்சீசன், எரிலிந்தெடிக், செகண்ட் எர்லி, அர்கா கந்தி ஆகியவை ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

ஆகஸ்ட் – செப்டம்பர், டிசம்பர் – ஜனவரி வரையுள்ள காலம் பயிர் செய்ய ஏற்றது.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் பயிரிட ஏற்றது. பயிரிட குளிர்ச்சியான பனி மூட்டம் தேவை. பொதுவாக இம்மாதிரி பனி மூட்டம் எல்லா மலைப்பகுதியிலும் கிடைக்கும். தமிழ்நாட்டில் சமவெளியில் இப்பயிர்களைக் குளிர் காலத்தில் பயிர் செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரையுள்ள நிலங்கள் ஏற்றவை.

நாற்றங்கால் தயாரித்தல்

ஒரு எக்டர் பயிரிட 100 சதுர மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படும். தொழு உரம், கலப்பு உரம் 10 கிலோ (9:9:9 முறையே தழை:மணி:சாம்பல்) மற்றும் 50 கிராம் சோடியம் மாலிப்டேட், 100 கிராம் போரக்ஸ் இட்டு மண்ணை நன்கு கிளறிவிட்டு, ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகள் அமைக்கவேண்டும். பாத்தியைச் சுற்றி 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 375 கிராம் விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள பாத்திகளில் 10 செ.மீ நேர் கோட்டில் விதைகளை விதைத்து, மண்ணால் மூடி காய்ந்த புல்லைக்கொண்டு மெல்லிய போர்வை அமைக்க வேண்டும். பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் விதைத்த 15ம் நாள் மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1½ மில்லி என்ற அளவில் கலந்து நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நடவு நிலத்தை 3-4 முறை நன்றாக ஆழமாக உழுது வசதியான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். அவற்றினுள் ஆழமான வாய்க்கால்களுடன் பார்கள் அமைக்கவேண்டும்.

விதைத்தல்

ஆரோக்கியமான 30-40 நாட்கள் ஆன நாற்றுக்களை நாற்றங்காலில் இருந்து வேர்கள் சேதமடையாமல் மிக்க கவனத்துடன் பறித்து நடவு வயலில் நீர் பாய்ச்சி 60 x 30 செ.மீ அல்லது 60 x 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்

மலைப்பகுதிகளுக்கு நிலம் தயார் செய்யும்போது எக்டருக்கு 30 டன் தொழு உரம் இட்டு நன்கு கலந்துவிடவேண்டும். அடியுரமாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 90 கிலோ சாம்பல் சத்து அளிக்கவேண்டும். பிறகு நட்ட 45 நாட்கள் கழித்து மேலுரமாக 45:45:45 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.சமவெளிப்பகுதிகளுக்கு நிலம் தயார் செய்யும்போது எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்ட மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். அடியுரமாக எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து, 100 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல்சத்து இடவேண்டும். பிறகு நட்ட 45 நாட்கள் கழித்து மேலுரமாக 50 கிலோ தழைச்சத்துடன் 2 கிலோ இரசாயன உரம் கலக்காத நுண்ணூட்டக் கலவையை இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

நட்ட 20வது நாள், பயிர் எண்ணிக்கையை பராமரிக்கவும், பயிர்கள் சீராக வளரவும் பயிர் களைதல் வேண்டும். பிறகு 30 மற்றும் 45வது நாளில் பயிருக்கும் மண்ணுக்கும் அதிக சேதம் ஏற்படாமல் களைக்கொத்து கொண்டு களை நீக்கம் செய்யவேண்டும். நல்ல தரமான காலிஃபிளவர் பெற நன்கு வளர்ந்த பெரிய இலைகளை மடக்கிவிட்டு காலிஃபிளவரை 5-8 நாட்கள் வரை மூடி கட்ட வேண்டும். இவ்வாறு கட்டினால் பூ நல்ல வெண்மை நிறத்தில் இருக்கும்.

அசுவினிப் பூச்சிகள்

அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒட்டும் மஞ்சள் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது ஒரு லிட்டர் நீரில் டை மெத்தோயேட் 2 மில்லி மற்றும் 0.5 மில்லி டீப்பாலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் சேர்த்துத் தெளிக்கவேண்டும்.

வெட்டுப்புழுக்கள்

வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மேன்கோசெப் 3 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கவேண்டும்.

வேர்முடிச்சு நோய்

வேர்முடிச்சு நோயைத் தடுக்க நாற்றுக்களை நடும்முன் நடவு வயலில் ஒரு கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து ஊற்றவேண்டும். அல்லது நாற்றுக்களை நடுமுன் மேற்கண்ட கரைசலில் இரண்டு நிமிடம் வைத்திருந்து நடவேண்டும்.

கூட்டுப்புழு

கூட்டுப்புழுவை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு டைக்குளோராவாஸ் 2 மில்லி, குளோரிபைரிபாஸ் 4 மில்லி இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும்.

நூற்புழு

நூற்புழுவை கட்டுப்படுத்த செடி நட்ட 15ம் நாள் பியூரடான் குருணை மருந்தை ஒரு ஏக்கருக்கு 5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 20 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து காட்டில் தூவி விட வேண்டும்.

அறுவடை

சரியான அளவில் காலிஃபிளவர் பூக்களை அறுவடை செய்ய வேண்டும். காலம் தாமதித்தால் காலிஃபிளவர் விரிந்து, கிளைகள் உருவாகி, முற்றிய பூக்களாகி வியாபாரத்திற்கு உகந்ததாக இருக்காது.

மகசூல்

ஒரு எக்டருக்கு 20-30 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.




தற்போதைய செய்திகள்