கொடிப்பயிரில் புடலை சிறப்பிடம் வகிக்கிறது. வணிக ரீதியாகவும், வீட்டுத் தோட்டத்திலும் பயிரிட ஏற்ற பயிராக புடலை இருக்கின்றன. இதன் சாகுபடி முறையை பற்றி பார்ப்போம்.
ஏற்ற பருவம் :
புடலைக்கு ஜூன் முதல் ஜூலை மாதங்கள் சாகுபடி செய்ய ஏற்ற காலமாகும்.
ஏற்ற மண் மற்றும் தட்பவெப்பநிலை :
புடலை ஒரு வெப்பமண்டல பயிர் ஆகும். இதன் சாகுபடி மற்றும் சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 என்ற அளவில் இருக்க வேண்டும்.
மணல் கலந்த மண் உள்ள வளமான நிலத்தில் புடலை நன்கு விளையும். மிதமான வெப்பநிலை இப்பயிர்களுக்கு ஏற்றது.
ரகங்கள் :
⏩ புடலையில் கோ (கோவை) 1, கோ (கோவை) 2, பி.கே.எம் (பெரியகுளம்) 1, எம்.டி.யு (மதுரை) 1 மற்றும் பி.எல்.ஆர் (எஸ்ஜி) 1 ஆகிய ரகங்கள் உள்ளன. ஆந்திர மாநிலம் வெளியிடப்பட்டுள்ள சுவேதா என்ற ரகமும் பரவலாக பயிரிடப்படுகிறது.
நிலம் தயாரிக்கும் முறை :
நிலத்தை மூன்று முதல் நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவிற்கு முன்பு 20 டன் மக்கிய தொழுஉரம் இட்டு உழவு செய்து நிலத்தை சமம் செய்து கொள்ள வேண்டும்.
2 மீட்டர் இடைவெளியில் 80 செ.மீ அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ நீளம், ஆழம், அகலம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும்.
தோண்டிய குழிகளை 7 முதல் 10 நாட்கள் வரை ஆறப்போடவேண்டும். ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரத்தை, 5 கிலோ மேல் மண்ணுடன் கலந்து இடவேண்டும்.
விதை நேர்த்தி :
ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். விதையினை தலா 4 கிராம் சூடோமோனஸ், டிரைகோடெர்மா விரடி, அசேஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
2 செ.மீ ஆழத்தில், குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும். 8 முதல் 10 நாட்களில் விதை முளைக்கத் தொடங்கும். அதில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற நாற்றுகளை களைத்து விட வேண்டும்.
நீர் மேலாண்மை :
விதைகள் முளைத்து வரும் வரை குழிகளுக்கு பூவாளியால் நீர் ஊற்றிவர வேண்டும். சுமார் 8 முதல் 10 நாட்களில் விதைகள் முளைத்த பின்பு வாய்க்கால்கள் மூலம் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு சொட்டுநீர்ப்பாசனமும் ஏற்றது.
களை கட்டுப்பாடு :
புடலை விதைப்பு செய்த 15-வது நாளிலும், முப்பதாவது நாளிலும் களை எடுக்க வேண்டும்.
உரம் :
ஒரு ஹெக்டருக்கு அடி உரமாக 20-30 கிலோ தழைச்சத்து, 30-50 கிலோ மணிச்சத்து மற்றும் 30-40 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். மேலுரமாக 20-30 கிலோ தழைச்சத்தை பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
நீர் பாசனத்தின் போது பீஜாமிர்தம், பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல் போன்றவைகளை கலந்து விட வேண்டும்.
பந்தல் :
புடலைக்கொடி நன்கு படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் அமைக்க வேண்டும். விதை முளைத்து கொடி வளரும் போது கொடியினை மூங்கில் குச்சி அல்லது மற்ற ஏதாவது ஒரு குச்சிகளை வைத்து ஊன்று கொடுத்து பந்தலில் படரச் செய்ய வேண்டும்.
புடலையில் குட்டை மற்றும் நீண்ட காய் இரகங்கள் உள்ளன. நீண்ட காய் இரகங்களின் பிஞ்சுகளின் நுனிப்பாகத்தில் சிறிய கற்களை கட்டிவிடுவதன் மூலம் காய்கள் ஒரே சீராக வளர்ந்து அதிக பலனைத் தரும். கோ-2 ரக புடலைக்குப் பந்தல் அமைக்கத் தேவையில்லை.
⏩ இரண்டு இலைப்பருவத்தில் தேமோர் கரைசல் தெளித்தால் பெண் பூக்கள் அதிகமாக உற்பத்தியாகும். இதை மூன்று முறை ஒரு வார இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
பூச்சி :
⏩ புடலையில் அதிகமாக பூசணி வண்டு மற்றும் பழ ஈ தாக்குதல் அதிகமாக காணப்படும். இதனை கட்டுப்படுத்த இஞ்சி-பூண்டு-மிளகாய் கரைசல் அல்லது வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்க வேண்டும்.
நோய் :
⏩ சாம்பல் நோய் மற்றும் அடிச்சாம்பல்நோய் - இதனைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் தெளிக்கலாம் அல்லது 5 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவேண்டும்.
அறுவடை :
⏩ விதைப்பு செய்த 75-80 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும், சுமார் 5-7 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் அறுவடை செய்யலாம். ஹெக்டருக்கு 134-145 நாட்களில் 18 டன் காய்கள் கிடைக்கும்.
