முருங்கைக்காயின் உயிரியல் பெயர் முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் அதிக அளவு முருங்கை பயிரிடப்படுகிறது. இது வறட்சியான காலங்களிலும் நன்கு வளரக்கூடிய தன்மை உடையது. இதனால் விவசாயிகளுக்கு உகந்த பயிராக இருக்கின்றது.
ரகங்கள்:
முருங்கைக்காயில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் நாட்டு முருங்கையில் அதிக அளவு மருத்துவ குணங்களும் சுவையும் நிறைந்து காணப்படும். செடி முருகையில் காய்கள் நன்கு தடித்து காணப்படும், சிறிதளவு சுவை குறைந்து காணப்படும்.
செடிமுருங்கை இரண்டு ஆண்டுகள் வரை வளரும் தன்மை உடையது. அனால் நாட்டு முருங்கை அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை வளரும்.
பயிரிடும் முறை:
ஜூன் – ஜூலை , நவம்பர் – டிசம்பர் மாதங்கள் முருங்கை சாகுபடிக்கு சிறந்த பருவங்கள் ஆகும்.
செம்மண் அல்லது கரிசல்மண் பூமி முருங்கை விளைச்சலுக்கு சிறந்த மண். மண்ணின் கார மற்றும் அமிலத்தன்மை 6 – 7.5 வரை இருக்க வேண்டும்.
நாற்றுகள் மூலமாகவும் விதை குச்சிகள் மூலமாகவும் பயிரிடலாம்.
குறைந்தது 16 அடி இடைவெளியில் கால்வாய்கள் அமைத்து அதில் ஒரு அடி ஆழத்திற்கு குழியெடுத்து கொள்ளவும், ஒவ்வொரு குழியிலும் மூன்று கிலோ தொழுவுரம்,100 கிராம் வெப்பம் புண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு ஆற விட வேண்டும்.
இக்குழியில் விதை குச்சிகளை நட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட வேண்டும், அதன்பின்பு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
அறுவடைக்கு முன் ஒவ்வொரு மரத்திற்கும் 200 கிராம் வேப்பம புண்ணாக்கு வைக்க வேண்டும்.
அதேபோல் அறுவடை முடிந்தவுடன் ஒவ்வொரு மரத்திற்கும் 30 கிலோ தொழுவுரம் வைத்து வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
ஒரு மீட்டர் உயரம் வளர்ந்த உடன் கிள்ளிவிட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகள் அதிகமாக தோன்றி நல்ல விளைச்சல் கிடைக்கும்.
