width:960px height:540px காய்கறிகள்

தக்காளி சாகுபடி
தக்காளி ஒரு வெப்ப மண்டலப் பயிர். அமெரிக்காவிலுள்ள பெரு என்ற நாட்டில் இந்தப் பயிர் தோன்றியது. நன்கு பழுத்த பழங்கள் நாம் அன்றாடம் செய்யும் சமையலில் ரசம் போன்ற உணவு வகைகளில் பயன்படுவதுடன் சூப், சாஸ், ஜாம், கெட்சப் போன்ற தயாரிப்புகளிலும் பயன்படுகிறது. வைட்டமின் ‘ஏ’ ‘சி’ போன்ற உயிர்ச்சத்துக்கள் தக்காளிப் பழத்தில் அதிகம் உள்ளன.

 

மண்வளம் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுள்ள இருமண்பாட்டு நிலம் தக்காளி சாகுபடி செய்ய உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.0 வரை இருக்கலாம். காற்றின் வெப்பநிலை 20.0 செல்சியஸ் முதல் 25.0 செல்சியஸ் வரை இருக்கும் போது தக்காளி

நன்கு வளர்ந்து அதிக மகசூல் தரும். குறைந்த அளவு வெப்பநிலை 15 டிகிரி செல்சியசுக்கும் குறையும் போதும், அதிக அளவு வெப்ப நிலை 35 டிகிரி செல்சியசை விட அதிகரிக்கும் போதும் இப்பயிரின் மகசூல் பாதிப்படைகிறது.

 

இரகங்கள்

கோ I

இது கல்யாண்பூர் தேர்விலிருந்து மறு தேர்வு செய்யப்பட்ட ஒர் இரகம், பழங்கள் உருண்டையாகவும் (கோடுகளின்றி) சிவப்பு நிறத்துடனும் காணப்படும். செடிகள் குத்துச் செடியுமில்லாத கொடியாகவுமில்லாது இடைப்பட்ட

வளர்ச்சியைக் கொண்டிருக்கும். இதன் வயது 135 நாட்கள். எக்டருக்கு 25 டன் வரை மகசூல் தரவல்லது.

கோ, 2

ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒர் இரகத்திலிருந்து மறு தேர்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த இரகம். பழங்கள் பெரியவையாகவும் தட்டையான வடிவத்துடன் 5 ஆழமான கோடுகளுடன் காணப்படும். நன்கு பழுத்த பழங்கள் ஆரஞ்சு சிவப்பு நிறத்துடன் இருக்கும். இதன் வயது 140 நாட்கள். எக்டருக்கு 28-30 டன் வரை மகசூல் தரவல்லது.

கோ. 3 (மருதம்)

கோ. 1 இரகத்தின் விதைகளை சடுதி மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட இரகம். இது ஒரு குத்து இரகமாதலால் மிகவும் நெருக்கமாக நடவு செய்ய (30 x 30 செ.மீ) ஏற்றது.

பழங்கள் உருண்டையாக நன்கு மெல்லிய கோடுகளுடன் காணப்படும். நன்கு பழுத்த பழங்கள் அடர்சிவப்பு நிறத்துடன் இருக்கும். கொத்தாக காய்கள் பிடிக்கும் இந்த இரகம் 100-105 நாட்களில் எக்டருக்கு 40 டன்கள் வரை மகசூல் தரவல்லது.

மேற்கூறப்பட்ட இந்த மூன்று இரகங்களும் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டன.

பி. கே. எம். i (பெரியகுளம் 1)

இந்த இரகம் பெரிகுளத்திலுள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் அன்னஞ்சி என்ற உள்ளூர் இரகத்தை சடுதி மாற்றம் செய்து உருவாக்கப்பட்டது. தட்டை உருண்டை வடிவப் பழங்களைக் கொண்டது.

பழங்கள் மேற்பரப்பில் பச்சைப்பட்டையுடனும் அடிப்பக்கம் நல்ல சிவப்பு நிறத்துடனும் காணப்படும். இது 135 நாட்களில் ஒர் எக்டருக்கு 30 முதல் 35 டன் வரை மகசூல் தரவல்லது. பழங்கள் அதிக தூரம் எடுத்துச் செல்ல உகந்தவை.

 

நாற்றங்கால் தயாரிப்பு

விதைகள் மிகச் சிறியவையாதலின் சாதாரணமாக நாற்றுவிட்டு நடவு செய்யப்படுகின்றன. ஒரு எக்டர் நடவு செய்யத் தேவையான நாற்றுகளைத் தயாரிக்க சுமார் 400 கிராம் விதை தேவை. இவ்விதையை 4 சென்ட் பரப்பு நாற்றங்கால் தயார் செய்து விதைக்க வேண்டும்.

மே மாதத்தின் கடைசி வாரத்திலோ டிசம்பர் மாத முதல் வாரத்திலோ நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.

முதலில் நிலத்தை நன்கு ஆழமாகக் கிளறிவிட்டு 4 சென்ட் பரப்பிற்கு 160 கிலோ மக்கிய தொழு உரத்தை இட்டு கலந்து மண் கட்டிகள் இல்லாதவாறு தட்டிவிட்டு சுமார் 60-70 செ.மீ. அகலமும் வசதியான அளவு நீளமும் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்கப்பட வேண்டும்.

 

விதைக்கு நுண்ணுயிர் மூலம் விதை நேர்த்தி

ஓர் எக்டருக்குத் தேவையான 400 கிராம் விதையுடன் சோறு வடித்த கஞ்சியை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலந்து விதைகளின் மேற்பரப்பில் அது சிறிதே படிந்திருக்கும் தருணத்தில் 100-200 கிராம் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் கலவையை தூவிக் கலந்து விடவும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை சுமார் 30 நிமிடங்கள் நிழலில் காய வைக்க வேண்டும்.

 

விதைப்பு

தயார் செய்யப்பட்ட மேட்டுப்பாத்திகளின் குறுக்கே 2.5 செ.மீ. இடைவெளியில் விரலால் கோடுகள் கிழித்து அதில் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை அதிக நெருக்கமின்றி சீராகத் தூவி விதைத்து பின் மேல் மண்ணால் மூட வேண்டும். இதற்கு மேல் 10 கிலோ மக்கிய காய்ந்த பொடி செய்யப்பட்ட தொழு உரத்துடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம் கலந்த கலவையை

ஒரே சீராகத்தூவி மூடவும். பாத்திகளின் மேல் பரப்பை வைக்கோல் அல்லது காய்ந்த புல் கொண்டு மென்மையான போர்வை போல் பரப்பி அதன் மேல் பூவாளி கொண்டு நீர் ஊற்றி வரவேண்டும். பாத்திகளைச் சுற்றி பி.எச். சி. 10 சத தூளை ஒரே சீராக தூவி விடுவதன்

மூலம் விதைகளை எறும்புகள் இழுத்துச் செல்லாமல் பாதுகாக்க வேண்டும். விதைத்த 7 முதல் 8 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். அப்போது பாத்திகளின் மேல் பரப்பப்பட்ட வைக்கோல் போர்வையை நீக்கிவிட வேண்டும். இத்தருணத்தில் வேர் அழுகல்

நோயினால் இளஞ்செடிகள் காய்ந்துவிடும் வாய்ப்பு அதிகம். எனவே இதிலிருந்து நாற்றுகளைக் காப்பாற்ற 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற விகிதத்தில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு

அல்லது பைட்டலான் என்ற பூஞ்சாணக் கொல்லியைக் கரைத்து இக்கரைசலை பூவாளியினால் பாத்திகள் நன்கு நனையும் வண்ணம் ஊற்ற வேண்டும். விதைத்த 15 முதல் 20 நாட்களில் 1.6 கிலோ கார்போபியுரான் குருணை மருந்தினை மண்ணுடன் கலந்து உடனே நீர் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி

ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதோடு அவற்றினால் பரப்பப்படும் நச்சுயிரி நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கப்பெற வாய்ப்புள்ளது. விதைகள், விதைத்த 25-30 நாட்களில் நாற்றுக்கள் நடவு செய்யத் தயாராகின்றன.

 

நடவு வயல் தயாரிப்பு மற்றும் முன்செய் நேர்த்தி

நடவு செய்யும் நிலத்தை 3 முதல் 4 தடவை வரை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 20-25 டன் மக்கிய தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் இட்டு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். பின்பு 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து வசதியான அளவில் வாய்க்கால் வரப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

அடி உரமிடல்

எக்டருக்கு 75 கிலோ தழை 100 கிலோ மணிச்சத்தும் மற்றும் 50 கிலோ சாம்பல்சத்தும் இட வேண்டும். இதற்கு 165 கிலோ பூரியா, 625 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 80 கிலோ மிபூரியேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களைக் கலந்து பார்களின்

ஒருபுறம் இட்டு மண்ணுடன் கிளறிக் கலந்து விட வேண்டும். அடி உரமிட்டவுடன் நடவுக்கு முன் எக்டருக்கு 1 லிட்டர் புளுகுளோரலின் என்ற களைக் கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மண்ணில் ஒரே சீராக பின்னோக்கி நடந்து தெளித்துச் செல்ல வேண்டும். பின்பு நீர் பாய்ச்சி நாற்றுகளை ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் பார்களின் உரமிட்ட பக்கத்தில் நடவு செய்ய வேண்டும்.

இடைவெளி : கோ-1 - 60 x 45 செ.மீ. கோ-2 & பிகேஎம்-1 - 60 x 60 செ.மீ.

 

நீர்ப்பாசனம்

நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த்தண்ணிர் கட்ட வேண்டும். அதற்குப்பின்னர் 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சி வர வேண்டும்.

 

பின் செய் நேர்த்தி மற்றும் மேலுரமிடல்

நடவு செய்த 30-35 நாட்களில் களை எடுத்து, பின் மேலுரமிட்டு மண் அணைக்க வேண்டும். அடி உரமாக அளித்த தழைச்சத்தின் அளவு மேலுரமாக அளிக்க வேண்டும்.

மகசூலை அதிகரிப்பதற்காக ட்ரைகான்டினால் என்ற பயிர் ஊக்கியை 1 லிட்டர் தண்ணிருக்கு 1 மி.கி. வீதம் நல்ல தண்ணிரில் கலந்து நடவு செய்த 18 நாட்களுக்கு பின் ஒரு முறையும், பூக்கும் பருவத்தில் ஒருமுறையும் கைத் தெளிப்பான் கொண்டு, மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

 

பயிர்பாதுகாப்பு

தக்காளியைத் தாக்கும் பூச்சிகளில் அதிக அளவில் காய்த்துளைப்பான்கள் சேதத்தை உண்டாக்குகிறது. இதனை ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இனக்கவர்ச்சி பொறியினை ஒரு ஹெக்டேருக்கு 12 வீதம் வைப்பதன் மூலம் பெண் பூச்சியினைக் கவர்ந்து இதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

தக்காளி நாற்றுக்களை நடவு செய்யும் போதே 40 நாள் வயதுடைய கேந்தி செடிகளை 16 வரிசை தக்காளிச் செடிகளுக்கு ஒரு வரிசை அளவிற்கு நடவு செய்ய வேண்டும்.

வளர்ந்த புழுக்களையும் தாக்கப்பட்ட பழங்களையும் பொறுக்கி அழிக்க வேண்டும்.

எண்டோசல்பான் லிட்டருக்கு 2 மி.லி. அல்லது கார்பரில் லிட்டருக்கு 2 கிராம் அல்லது குயினில் ஃபாஸ் லிட்டருக்கு 2.5 மிலி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தக்காளி இலைப்பேன் தாக்குதல் மூலம் பரவும் குத்துக்கருகல் நச்சுயிரி நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இலைகளின் அடிப்பகுதியில் நரம்புகள் ஊதா நிறமடைந்து பின்பு புள்ளிகள் தோன்றி காயத் தொடங்குகின்றன.

முற்றிய நிலையில் முழுச் செடியும் வாடிவிடுகிறது. இலைப்பேன்கள் இந்த நச்சுயிரியைப் பரப்புவதால் இலைப் பேன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய் பரவாமல் ஒரளவு தடுக்கலாம்

. இதற்கு பியூரடான் குருனை மருந்தை நாற்றங்காலில் இடுவதோடு நிறுத்திவிடாமல் நடவு வயலிலும் நாற்று நட்ட 15ம் நாள் ஒருமுறை மற்றும் 30ம் நாள் ஒருமுறை என ஒவ்வொரு முறையும் ஹெக்டருக்கு 7 கிலோ

என்ற அளவில் செடியின் தூரிலிருந்து 5 செ.மீ. தள்ளி ஒரு துளையிட்டு அதில் ஒரு சிட்டிகை என்ற அளவில் இட்டு மூடி நீர் பாய்ச்சி வரவேண்டும்.

இலைச் சுருட்டு என்னும் மற்றொரு நச்சுயிரி நோய் வெள்ளை ஈக்களால் பரப்பப்படுகிறது. வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் 2.5 மிலி + வேப்பெண்ணை 2 மிலி ஆகிய அளவு 1 லிட்டர் தண்ணிருக்கு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம்.45 என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணிருக்கு 2 கிராம் என்ற விகிதத்தால் கலந்து தெளிக்க வேண்டும்.

 

அறுவடை மற்றும் மகசூல்

ஹெக்டேருக்கு 35 டன்கள் தக்காளி செடியில் இருக்கும் போதே செங்காய் பதத்தில் (காய்களின் மேற்பரப்பு கால்பகுதி பழுக்கத் தொடங்கியவுடன்) பறிக்கப்பட்டு கூடைகளில் அடுக்கப்பட்டு கட்டி வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய நன்கு பழுத்தபின் அறுவடை செய்யலாம்.
தற்போதைய செய்திகள்