கோவைக்காய் கொடிவகை தாவரங்களில் ஒன்று. இதனை தொண்டைக்கொடி என அழைக்கின்றனர்.
வேலிகள், தோட்டங்கள், காடுகளில், இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது.
கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு இதனை பலவகையாகப் பிரிக்கின்றனர் இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
பயிரிடும் முறை :-
கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, படப்பை, நமக்கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.
சித்திரை மாதத்தைத் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்யலாம். ஆனால், ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
ஒரு முறை நடவு செய்யும் கோவைக்காய் செடிகளை, மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம்.
வடிகால் வசதியுடன் கூடிய செம்மண், மணல்சாரி ஆகிய மண்வகைகள் கோவைக்காய்க்கு ஏற்றவை.
தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 2 டன் எருவைக் கொட்டிக் கலைத்து விட்டு, மூன்று சால் உழவு செய்து, நான்கு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு முளைத்து வரும் களைகள் நீக்கும் அளவிற்கு மீண்டும் உழவு செய்து நிலத்தைச் சமன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண் செடிகளிருந்து கிடைக்கும் தண்டுக்குச்சிகள் தான் நடவுக்கு பயன்படுகிறது. விதைக்கான கொடித் தண்டுகளைத் தேர்வு செய்யும் பொழுது இரண்டு முதல் இரண்டரை வயதுள்ளவையாக இருக்க வேண்டும்.
6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் வாய்க்கால் அமைக்க வேண்டும். இந்த வாய்க்காலில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்து ஒவ்வொரு குழியிலும் இரண்டு கிலோ இரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாக கலந்து மூடி, மூன்று அல்லது நான்கு கோவைக்காய் கொடி தண்டுகளை நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்த பிறகு குழிகள் மீது வைக்கோல் கொண்டு மூடாக்கு போட்டு உயிர்த் தண்ணிர் கொண்டு வேண்டும். மண்ணில் ஈரம் இருபதற்கு ஏற்ப 5 நாட்கள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணிர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு பாசன இடைவெளியைக் கூட்டி கொள்ளலாம். சாதாரண முறையில் பாசனம் செய்வதை விட, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது சிறப்பானது. சாதாரணப் பாசனமாக இருந்தால் 4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறையும், சொட்டு நீர்பாசனமாக இருந்தால், 2 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது.
20 ம் நாளில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் ஒரு கொம்பு இருக்குமாறு ஆறடிக்கு ஆறடி இடைவெளியில் ஐந்தரை அடி உயரத்தில் மூங்கில் கொம்புகளையோ அல்லது கல் தூண்களை கொண்டோ பந்தல் அமைக்க வேண்டும். 30 ம் நாளில் செடியை ஒட்டி குச்சி ஊன்றி, கொடிகளை பந்தலில் ஏற்றிவிட வேண்டும். 60 ம் நாளில் கொடிகள் படர ஆரம்பித்து, 70 ம் நாள் முதல் காய்க்க ஆரம்பிக்கும். தொடர்ந்து மாதம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.
அறுவடை காலத்தில் ஒரு நாள்விட்டு ஒரு நாள் அறுவடை செய்ய வேண்டும். மீதி நாட்களில் வாரம் ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு சராசரியாக 24 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
