உருளைக்கிழங்கு செடியின் வேரில் இருந்து பெறப்படும் இக்கிழங்கு, மாவுப்பொருள் நிறைந்தது.அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும்.
ரகங்கள்
குப்ரி ஜோதி,
குப்ரி முத்து,
குப்ரி சொர்ணா,
குப்ரி தங்கம்,
குப்ரி மலர்
குப்ரி சோகா,
குப்ரி கிரிராஜ்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை
உருளைக் கிழங்கை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. மிகுதியான நிறமக்கு நிறைந்த இருபொறை நிலங்கள் ஏற்றவை. களிமண் பூமியைத் தவிர்க்க வேண்டும். வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. குளரி மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 4.8 முதல் 5.4 சதம் வரை இருக்கலாம். ஆண்டுக்கு 1,200 முதல் 2,000 மில்லி மீட்டர் வரை மழை பெறும் பகுதிகளில் உருளைக் கிழங்கு பயிரிடலாம்.
நடவு செய்யும் பருவம்
மலைப் பகுதிகளில் கோடைக்காலமான மார்ச் - ஏப்ரல், இலையுதிர் காலமான ஆகஸ்ட், செப்டம்பரில் பயிரிடலாம். இறவைப் பயிராக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயிரிடலாம். சமவெளிப்பகுதிகளுக்கு அக்டோபர் - நவம்பரில் பயிரிடுவது உகந்தது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்றாகக் கொத்தி, பண்படுத்தி 45 செ.மீ. இடைவெளியில் பார் பிடிக்கவேண்டும்.
மலைப் பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வுத்தளம் அமைக்கவேண்டும்.
வடிகாலுக்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
ஹெக்டேருக்கு 3,000 முதல் 3,500 கிலோ கிழங்குகள் வரை தேவைப்படும். உருளைக் கிழங்கு சாகுபடியில் விதைத் தயாரிப்பு முக்கியமாக கவனிக்கவேண்டும்.
புதிய கிழங்குகள் முளைக்காது, ஆகவே முளைப்புத் தன்மையை ஏற்படுத்த கார்பன்-டை-சல்பைடு என்னும் மருந்தை 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவேண்டும்.
கிழங்குகளை குவியலாக்கி குவியலின் மேல் ஒரு அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி பாலித்தீன் தாளினால் மூடவேண்டும். கிழங்குகளில் முளை வந்தவுடன், நடவுக்குப் பயன்படுத்தவேண்டும்.
நிலத்தின் சாய்தளத்தைப் பொறுத்து செடிக்கு செடி 15-20 செ.மீ இடைவெளியில் முளைவந்த கிழங்குகளை நடவேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவுக்குப் பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும், பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 15 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம், 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும். இதனுடன் 60 கிலோ மக்னீசியம் சல்பேட்டையும் அடியுரமாக இடவேண்டும். பிறகு விதைத்த 30 நாள் கழித்து 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும்
உரப்பாசனம்
உருளைக் கிழங்கில் ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே ஹெக்டேருக்கு 120:240:120 கி.கி. என்ற அளவில் வழங்க வேண்டும். இதில் 75சதவீதம் மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக அடியுரமாக அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுள்காலம் முழுவதும் 3 நாள்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
உருளைக்கிழங்கில் விதை விதைத்த 60 நாள்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். விதைத்த 45-ஆவது மற்றும் 60-ஆவது நாளில் களை எடுத்து மண் அணைக்கவேண்டும்.
வெட்டுப்புழுக்கள்
இது உருளைக்கிழங்குப் பயிரில் 5 முதல் 10 சதம் வரை சேதத்தை ஏற்படுத்தும். இப்புழுக்கள் எல்லாப் பருவத்திலும் தோன்றும். இப்புழு கிழங்குகளில் துளைபோட்டு மாவுப் பகுதியை உண்கிறது. இதனால் தாக்கப்பட்ட கிழங்கில் பெரிய குழிகள் உண்டாகி, நாளடைவில் கிழங்கு அழுகிவிடும்.
கட்டுப்பாட்டு முறைகள்
தரிசு காலங்களில் மண்ணை நன்கு கிளறி, புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கவேண்டும்.
தாய்ப்பூச்சிகளை விளக்குப்பொறி வைத்து கவர்ந்தழிக்கவேண்டும்.
சுழல் தெளிப்புப் பாசனம் உள்ள இடங்களில் தெளிப்பானைக் காலை நேரங்களில் இயங்கச் செய்யவேண்டும்.
நீரின் வேகத்தால் புழுக்கள் மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு பறவைகளுக்கு இரையாகிவிடும்.
குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து செடிகளின் தண்டுப்பகுதியில் ஊற்றவேண்டும்.
நூற்புழுக்கள்
உருளைக்கிழங்கில் நூற்புழுவின் தாக்குதலைத் தவிர்க்க உருளைக்கிழங்கு இனத்தைச் சாராத பயிர் வகைகளான கோதுமை, மக்காச்சோளம், பீன்ஸ் போன்ற பயிர்களைப் பயிரிடவேண்டும். அல்லது காய்கறிப் பயிர்களான முட்டைக்கோஸ், பூக்கோசு, கேரட், முள்ளங்கி, அவரை வகைகள் போன்ற பயிர்களைப் பயிரிட்டு பயிர் சுழற்சி செய்யவேண்டும். விதைக்கிழங்கை விதைப்பதற்கு முன்பு கார்போபியூரான் கரைசலில் நனைத்து விதைக்கவேண்டும். விதைக்கிழங்குகளை விதைப்பதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டும். நூற்புழுக்கள் நிறைந்த மண்ணிலுள்ள விதைக் கிழங்குகளை விதைக்காகப் பயன்படுத்தக்கூடாது. நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான குப்ரி சொர்ணா போன்ற ரகங்களைப் பயிரிடவேண்டும்.
இலைச்சுருள் நோய்
இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மேல்நோக்கிச் சுருண்டுவிடும். பாதிக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி வெளரி நிறமாகத் தோன்றும்.
இந்த வைரஸும் அசுவினி மூலம் பரவுகிறது.
வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்த வைரஸ் தாக்காத செடிகளிலிருந்து கிழங்கு எடுத்து அதை நடவு செய்யவேண்டும்.
தேவையறிந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அசுவினியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
அறுவடை
கிழங்குகள் நன்கு முற்றி தடித்திருக்கும்போது தோண்டி எடுத்தால் சேதம் குறையும். பின்பு கிழங்குகளை ராசி, பெரிய பொடி, வந்தபொடி மற்றும் தள்ளு என்னும் நான்கு விதங்களாக தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
மகசூல்
ஹெக்டருக்கு 120 நாளில் 15 முதல் 20 டன் உருளைக் கிழங்குகள் மகசூலாக கிடைக்கும்.
