width:800px height:400px தானியங்கள்

மக்காச்சோளம் சாகுபடி




மக்கா சோளம் கால்நடை தீவனமாகவும், சமையல் எண்ணெய் எடுப்பதற்காகவும் பயன்படுவதோடு தொழிற்சாலைகளில் மக்காச்சோளம் ஸ்டார்ச், பிரீவர்ஸ், மக்காச்சோளம், மைதா, சிரப், சர்க்கரை, குளுக்கோஸ் போன்ற பல பொருட்கள் தயரிக்கவும் பயன்படுகிறது.

இரகங்கள்

மக்காச்சோளம் இன் ரகங்கள் இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1, கலப்பின கோ 6, வீரிய ஒட்டு இரகங்களான கோ- 1, கங்கா- 5, கே.எச் -1,2,3, கோ.எச்.எம் -5, எம் -900, எம்.ஹைசெல், சின்ஜென்டா, என்.கே – 6240, பயனீர்- 30 வி- 62, பயனீர்- 30 வி – 92 மற்றும் பிக்பாஸ் ஆகியவை முக்கிய இரகங்களாகும்.

பருவம்

மக்காச்சோளம் மானாவாரியாக ஆடி (ஜீன் – ஜீலை) மற்றும் புரட்டாசி (செப்டம்பர் – அக்டோபர் ) மாதத்திலும், இறவைப் பயிராக தை (ஜனவரி – பிப்ரவரி) மற்றும் சித்திரை (ஏப்ரல் – மே) மாதத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றது. களிமண் நிலமும், அதிக நீர் தேங்கும் நிலமும் சாகுபடிக்கு ஏற்றது அல்ல.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். இறவை சாகுபடிக்கு ஏற்றவாறு பார்கள் அமைக்க வேண்டும்.

விதையளவு

ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி என்ற பூசனக் கொல்லியை கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.

விதைத்தல்

விதை நேர்த்தி செய்த விதைகளை பாருக்கு பார் 60 செ.மீ, செடிக்குச் செடி 20 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் 4 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

ஊன்றிய உடன் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

மக்காச்சோளம் உரங்கள்:

ஏக்கருக்கு 119 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 34 கிலோ பொட்டாஸ் தேவைப்படும். இதில் அடியுரமாக 30 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஸ் இடவேண்டும். விதைத்த 25ம் நாள் மேலுரமாக 60 கிலோ யூரியா மற்றும் 45ம் நாள் 29 கிலோ யூரியா, 17 கிலோ பொட்டாஸ் இடவேண்டும்.

இயற்கை உரமிடல் முறையில் 15ஆம் நாளில் வடிகட்டிய பஞ்சகாவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும். 40 நாளில் பூக்களோடு இருக்கும் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லி்டடர் பஞ்சகாவ்யாவைப் பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடையும்.

களை நிர்வாகம்

விதைத்த 3 நாட்களுக்குப்பின் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் பொழுது களைக்கொல்லியான அட்ரசின் 50 சதம் நனையும் தூள் 200 கிராம் அல்லது ஆலாகுளோ 1.6 லிட்டர் / ஏக்கர் என்ற அளவில் 360 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தவில்லை எனில் விதைத்த 17ம் நாளில் ஒரு முறையும், 40 முதல் 45வது நாளில் ஒரு முறையும் கைக்களை எடுக்கவேண்டும்.

அறுவடை

60 மற்றும் 70ஆம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100ஆம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் மணிகள் காணப்படும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாசனத்தை நிறுத்தி விடவேண்டும். 110ஆம் நாளில் தட்டைகள் காய்ந்து நிற்கும். கதிர்களை மட்டும் ஒடித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 2,500 முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.




தற்போதைய செய்திகள்