width:400px height:600px தானியங்கள்

பச்சைப்பயறு சாகுபடி..!!




இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இரகங்கள்

கோ 4, கோ 6, கே எம். 2, பையூர், வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் சாகுபடி செய்யலாம்.

களர், உவர் மற்றும் அமிலத்தன்மை இல்லாத செம்மண் சாகுபடிக்கு ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு தடவை நன்கு உழவு செய்ய வேண்டும். இதனால் மண் நன்கு பக்குவம் அடையும்.

ஏக்கருக்கு 2 டன் மக்கிய தொழுவுரம் இட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும். அடி உரமாக 20 கிலோ யூரியா மற்றும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 85 கிலோ பொட்டாஷையும் கலந்து பார்களின் பக்கவாட்டில் இட வேண்டும். நிலத்தை பாத்திகளாகவோ, அல்லது 30 செ.மீ. (1 அடி) அகலப்பார்களாகவோ அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதையளவு

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

விதைப்பு

தயார் செய்துள்ள பார்களில் பக்கவாட்டில் குழிக்கு இரண்டு விதை என்ற விகிதத்தில் ஊன்ற வேண்டும். செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

இறவை முறையில் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் அவசியம் பாய்ச்ச வேண்டும். அதன் பின்பு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூப்பு மற்றும் காய்ப்பிடிப்பு சமயங்களில் நீர் பாய்ச்சுதல் மிகவும் அவசியம். காய்ப்பிடிப்பின் போது நீர் சரிவர பாய்ச்சாவிட்டால் கடின விதைகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

உரங்கள்

மானாவாரிப்பயிர்களுக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து,12.5 கிலோ சாம்பல்சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப்பயிர்களுக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல்சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து தரக்கூடிய உரங்களை இட வேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.

பச்சைப்பயிறு பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக்கொல்லியான குயிசல்பாப் மருந்தை எக்டருக்கு 50 கிராம் என்ற அளவில் விதைத்த 15-20 நாளில் தெளிக்க வேண்டும்.

களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வது நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

இலை வழி நுண்ணூட்டம்

இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும்.

மகசூலை அதிகரிக்க இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

விதைப்பயிர் வளர்ச்சி பருவத்தின் போது காணப்படும் முக்கிய பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மிதைல் டெமட்டான் (அல்லது) டைமித்தோயேட் (அல்லது) பாஸ்போமிடான் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 மில்லி கலந்து தெளிக்கவும்.

வண்டுகளின் சேதத்தைத் தடுக்க எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி பருவங்களின் போது காணப்படும் தேமல் நோய் பாதித்த செடிகளை அவ்வப்போது நீக்க வேண்டும். வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் கொண்ட செடிகளை நீக்குவதுடன், பிடுங்கிய இடத்தில் 0.1% பெவிஸ்டின் கரைசல் ஊற்ற வேண்டும். இதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

அறுவடை

விதைத்த 70 – 80 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன. காய்கள் பழுப்பு நிறம் அடைவது அறுவடையின் அறிகுறி ஆகும். செடிகளில் 70 சத காய்கள் கறுமை நிறம் அடைந்தவுடன், செடிகளை வெட்டி களத்தில் போட வேண்டும். தாமதித்தால் காய்கள் வெடித்து விதை சிதறி விடும்.

மகசூல்

மானாவாரியில் எக்டருக்கு 600 – 750 கிலோவும், இறவையில் 1000 – 1200 கிலோவும் மகசூல் கிடைக்கும். இதில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்யலாம்.




தற்போதைய செய்திகள்