உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த பயிர் கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் முதன்முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக இன்றளவும் அறியப்படுகிறது. ஆனால் தற்போது கோதுமை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.
தானியங்களில் அரிசி மற்றும் மக்காசோளத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு விளைவிக்கப்படும் தானியம் கோதுமை ஆகும். கோதுமையை பயிரிடும் முறையை பற்றி இங்கு காணலாம்....
இரகங்கள் :
கோதுமையை பயிரிட கோ. வெ.1, சம்பா கோதுமை, கோ.வெ.2 போன்றவை இரகங்கள் ஏற்றவை.
பருவம் :
கோதுமையை பயிரிட நவம்பர் – டிசம்பர் மாதங்கள் ஏற்ற பருவங்கள் ஆகும். இந்த காலநிலைகளில் பயிரிடும் பொழுது நல்ல மகசூலை பெறலாம்.
மண் :
கோதுமை வண்டல் மற்றும் கரிசல் மண்ணில் நன்றாக விளையும் தன்மை கொண்டது.
நிலம் தயாரித்தல் :
நிலத்தை 3 அல்லது 4 முறை நன்கு உழவேண்டும். கடைசி உழவில் தொழு உரம், மண்புழுவுரம், வேப்பம் கொட்டை புண்ணாக்கு போன்றவற்றை இட்டு நிலத்தை நன்கு சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிலத்தை நன்கு உழுது மண் கட்டிகள் இல்லாதவாறு செய்யவேண்டும். பின்பு பாதிகளாக பிரித்து கொண்டு அந்த பாத்திகளுக்கு வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி :
விதைகளை விதைப்பதற்கு முன்பு விதைகளை அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். அல்லது அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும்.
பிறகு இதில் கோதுமை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைப்பதால் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்.
விதைத்தல் :
விதைகளை 30 செமீ இடைவெளியில் விதைகளை 2 செமீ ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம் :
விதைகளை நடவு செய்தவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். கோதுமை பயிரைப் பொறுத்தவரை நீர்ப் பாய்ச்சுவது சமவெளிக்கும், மலைப்பகுதிகளுக்கும் மாறுபடும்.
சமவெளி பகுதிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். மலைப்பகுதிகளுக்கு நீர் பாசனம் அதிகமாக தேவைப்படாது.
உர மேலாண்மை :
அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, மண் அணைத்து நீர்ப் பாய்ச்சவது மிகவும் அவசியம்.
விதைகளின் மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கையும், ஜீவாமிர்தக் கரைசலையும் தெளித்து வந்தால் இந்நோயை தடுக்கலாம்.
வாடல் நோயை கட்டுப்படுத்த பஞ்சகாவ்யக் கரைசலை தெளித்து வந்தால் இந்நோயிலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.
களை நிர்வாகம் :
களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்று நாட்களில் களை எடுக்க வேண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு :
கோதுமை பயிரில் பொதுவாக பூச்சித் தாக்குதல் இருக்காது. ஆனால் அசுவினி பூச்சித்தாக்குதல் இருந்தால் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து வரலாம்.
அறுவடை :
கோதுமை பயிரிட்ட 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
நன்கு காய்ந்த நிலையிலுள்ள கோதுமை தாள்களை அறுவடை செய்து அவற்றை நன்கு காயவைத்து கோதுமை மணிகளை பிரித்து எடுக்கவேண்டும்.
பிரித்தெடுக்கும் முறையை கைகள் மூலமாகவும், இயந்திரம் மூலமாகவும் பிரித்தெடுக்கலாம்.
மகசூல் :
கோதுமை பயிரை பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டால் 5000 கிலோ அளவு மகசூலை பெறலாம்.
இயற்கை உரம், மண்புழு உரம் கலந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் பொழுது நல்ல விளைச்சலை பெறலாம்.
கோதுமையின் பயன்கள் :
கோதுமை உடலுக்கு பலத்தை அளிக்க கூடிய தானியம் ஆகும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவாகும்.
அஜீரணம் மற்றும் அடிக்கடி ஏப்பம் வருபவர்கள் கோதுமை ரவை கஞ்சி செய்து பருகும் பொழுது உடனடியாக நிவாரணம் கிடைக்கும்
