நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும். இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும். இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம்.
உலக அளவில் தானிய உற்பத்தியில் நெல் மூன்றாம் இடம் வகிக்கிறது. சோளம்,கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிராகும் தானியம் நெல் ஆகும்.
நெல்லின் மேலுள்ள தோல் உமி என்று அழைக்கப்படுகிறது. இது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. நெல்லின் உமி ஆல்கஹால் தொழிற்ச்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட பானமாக பயன்படுத்தப்படுகிறது. கோழி பண்ணைகளில் கோழி தீவனமானாகும் பயன்படுகிறது.
மேலுறை நீக்கப்பட்ட நெல்லானது அரிசி என்று அழைக்கப்படுகிறது. அரிசியைத்தான் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
ரகங்களுக்கு ஏற்றவாறு நெல்லின் விளைச்சல் காலம் மாறுபடும். 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வளரும் ரகங்கள் உள்ளன. நெல் உற்பத்திக்கு வண்டல் மண் சிறந்தது.
நாற்றங்கால் தயாரிக்கும் முறை:
1 ஏக்கர் நிலத்திற்கு 30 – 40 கிலோ விதை நெல் போதுமானதாகும். ரகங்களுக்கு ஏற்றவாறு தரமான விதைகளை அரசாங்க களஞ்சியத்தில் வாங்கியோ அல்லது முந்தய சாகுபடி நெல்லையோ பயன்படுத்தலாம்.
1 சென்ட் நிலத்தை நன்கு ஏர் உழுது நீர் பாய்த்து அதில் இலை சத்துக்கள் மற்றும் தொழுவுரம் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
விதை நெல்லை சுமார் 8 – 10 மணி நேரம் ஊறவைத்து அதை ஒரு ஈரமான கோணிப்பையில் போட்டு முளைப்போட வேண்டும்.
அடுத்த நாள், மறுபடியும் அந்த நிலத்தை உழுது நீர் பாய்த்து சமன்படுத்தி சிறிது நேரம் தெளியவிட வேண்டும். பின்பு முளைகட்டிய விதையை அந்த நிலத்தில் சீராக தூவ வேண்டும்.
முதல் ஒரு வாரத்திற்கு அதிகப்படியான நீர் விடாமல் தேவையான அளவு நீர் விட்டு ஈரமாக பராமரிக்க வேண்டும். நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தவுடன் அதன் அளவுக்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம்.
30 நாட்களுக்கு பின் நாற்றுகள் 10 செ.மீ நீளம் வளர்ந்த பின்பு அதனை பிடுங்கி பயிரிடப்போகும் நிலத்தில் நடலாம்.
பயிரிடும் முறை:
நாற்றுகள் 20 நாட்கள் வளர்ந்த பின்பு பயிரிட போகும் நிலத்தை உழுது அதில் தேவையான அளவு தழை சத்து மற்றும் தொழுவுரம் போட்டு நீர் பாய்ச்சி ஒரு வாரம் நன்கு மக்கும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.
நாற்றுகள் 30 நாட்கள் ஆனா பின்பு மறுபடியும் நிலத்தை நன்கு உழுது நீர் பாய்ச்சி சமன்படுத்தி கொள்ள வேண்டும். பின்பு நாற்றுகளை பிடுங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிடுங்கி வைத்துள்ள நாற்றுகளை ஒன்றுக்கொன்று 10 செ.மீ இடைவெளிகளில் இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை ஒன்றாக சேர்த்து 3 செ.மீ ஆழத்திற்கு நடவேண்டும்.
பின்பு 30 நாட்கள் வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.
சீராக நீர் பாய்த்து பராமரித்தால் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
