width:275px height:183px கீரைகள்

கொத்தமல்லி சாகுபடி..




எளிதில் வளரும் இந்த கொத்தமல்லி பல்வேறு தன்மையுடைய மண் வகைகளிலும், வேறுபட்ட வானிலைகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதில் நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு நிலம் கொத்தமல்லி சாகுபடி செய்ய மிகவும் உகந்தது.

இதற்கு மண்ணின் அமில கார நிலை 6 - 8 வரை இருக்க வேண்டும். மல்லி ஓரளவு களர் உவர் தாங்கி வளரக்கூடியது, காற்றின் சராசரி வெப்பநிலை 20 - 25 செல்சியஸ் இருத்தல் பயிரின் வளர்ச்சிக்கு உகந்தது. மல்லி பெரும்பாலும் மானாவாரிப் பயிராக கரிசல் மண் நிலத்தில் பயிரிடுவதால் மழை அளவு குறைவாகவும், சீராகவும் இல்லாத காலங்களில் இதன் விளைச்சல் குறைவாகவே உள்ளது. இவ்வாறு நீர் பற்றாக்குறை இருக்கும் காலங்களில் வறட்சியைத் தாங்கி விளைச்சலை அதிகரிக்க விதை நேர்த்தி சிறந்தது.

எருக்கு மற்றும் வேலிக்கருவேல் இலையிலிருந்து தயாரிக்கப்பட்ட 2 சதக் கரைசலில் உடைக்கப்பட்ட கொத்தமல்லி விதைகளை 16 மணி நேரம் ஊறவைத்து (1 லிட்டர் கரைசலுக்கு 800 கிராம்) விதைகளை விதை நேர்த்தி செய்யலாம். பின்னர் விதைகளை நிழலில் உலர்த்தி மறுபடியும் விதைகளை 100 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்த ஆறிய கஞ்சியில் விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைப்பதால் 15 நாட்களில் 89 சதம் முளைப்புத் திறன் கிடைப்பதோடு முளைக்கும் நாற்றுகளின் வளர்ச்சியும் வீரியமும் அதிகமாகக் காணப்படும்.

விதை நேர்த்தி செய்யப்பட்டு முளைத்த நாற்றுகளில் இரண்டாவது பக்கக் கிளைகள், பூங்கொத்தில் உருவாகும் விதைகளின் எண்ணிக்கை மேம்படுவதுடன் வறட்சியைத் தாங்கவல்ல காரணிகளான புரோலின், பச்சையம், நிலைப்புத் தன்மை மற்றும் திசுக்களின் தண்ணீர் சார்பளவு ஆகியன அதிக அளவு இருப்பதால் நீர் பற்றாக்குறை உள்ள நிலங்களிலும் விளைச்சல் அதிகரிகின்றது. கொத்தமல்லியில் கோ. 1,2,3 மற்றும் சாதனா முதலிய இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

 

நல்ல பருவம்

ஜுன் & ஜூலை மற்றும் செப்டம்பர் & அக்டோபர் ஆகிய இரண்டு பருவத்தில் பயிரிடப்பட்டாலும் செப்டம்பர் & அக்டோபர் பட்டத்தில் மட்டுமே மானாவாரியில் அதிக அளவு கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. மண் பேணல் நிலத்தை மூன்று நான்கு முறை உழுது மண்ணை மிருதுவான பதத்திற்குக் கொண்டுவரச் செய்து, கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு எருவிட்டு மண்ணுடன் கலந்து இறவையாக பயிரிடுவதாக இருந்தால் சமபாத்திகள் அமைத்து விதைகளை விதைக்க வேண்டும்.

மானாவாரி சாகுபடி என்றால் உழவிற்கு முன்னர் தொழு எருவிட்டு உழுது விதைகளைச் சீராகத் தூவிப் பின்னர் நன்கு படர்ந்த மரக்கிளைகள் காய்ந்த மரக்கிளைகளை ஒடித்து மண்ணின் மேல் வைத்து மெதுவாகக் கையால் இழுப்பதன் மூலம் மண்ணில் தூவப்பட்ட விதைகள் மண்ணால் மூடப்பட்டு முளைக்க ஆயத்தமாகும். இறவையில் விதைகளை விதைக்கும் முன்னர் எக்டருக்கு 15 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல்சத்து அடியுரமாக இடவேண்டும். மானாவாரிப் பயிராக இருப்பின் கடைசி உழவிற்குப் பின்னர் எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்தையும், 30 கிலோ மணிச்சத்தையும் மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தையும் அடியுரமாக இடவேண்டும்

நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்திலும். கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருக்கும் மண் வகையிலும் கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம். இது 25 முதல்  28 டிகிரி வெப்பத்தில் வளரக்கூடியவை. அனனத்துப்பருவத்திலும் சாகுபடி செய்யலாம். வெயில் காலங்களில் நிழல் வலை அமைத்து பயிர் செய்வதன் மூலம் கொத்தமல்லி இலைகள் வதங்காமல் இருக்கும்.

 

விதை தேர்வு

ஒரு எக்டருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படும் 15 முதல் 30 நாட்கள் வரை சேமித்த கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து அதனை நடவு செய்ய வேண்டும். உடைத்த விதைகளைக் காலணியால் மிதித்தும் அல்லது சொர சொரப்பான நிலப்பரப்பிலோ அல்லது உப்பு கலந்த காகிதத்திலோ தேய்த்து உறக்க நிலையில் இருக்கும் விதையினை கிழிப்படையச் செய்து பின்னர் முன்பு கூறியபடி விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மானாவாரி விதைப்பு எனில் கையால் தூவியும். இறவை எனில் வரிசையிலும் விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும் இருத்தல் வேண்டும்.

 

பயிர் கலைத்தல்

விதைத்த 30 நாட்களில் வரிசையில் 15 செ.மீ இடைவெளியில் பயிர் இருக்குமாறு செடிகளைக் கீரையாக விற்பனைக்கு அனுப்பலாம்.

 

நீர் நிர்வாகம்

இறவையில் விதைத்தவுடன் மற்றும் மூன்றாம் நாளும் அதன் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

 

மேலுரமிடல்

இறவையில் 30 - ம் நாள் பயிரைக் கலைத்த பின்பு மேலுரமாக எக்டருக்கு 15 கிலோ தழைச்சத்தை இட்டு மண்ணுடன் கலந்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

பாதுகாப்பு தேவை

செடிகளின் இலைகளைத் தாக்கும் மேல்சாம்பல் நோயினைத் தடுக்க நனையும் கந்தகம் அல்லது காரத்தேன் 0.2 சதம் (எக்டருக்கு 1 கிலோ 500 லிட்டர் தண்ணீர்) தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். தானியத்தில் வரும் கரும் பூசண நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் (500 கிராம் மருந்தை 500 லிட்டர் தண்ணீர்) தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இளம் பருவப் பயிரில் சேதம் விளைவிக்கும் இலை தின்னும் புழுக்களையும், பூக்கும் தருணத்தில் காணப்படும் அசுவுணியைக் கட்டுப்படுத்தவும் 5 சதம் வேப்பம் பருப்புக் கரைசல் சாறை உபயோகிக்கவும். 0.05 சதம் மிதைல் டேமாட்டான் மருந்தினையோ தெளிப்பதன் மூலம் பூக்கும் பருவத்தில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விளைச்சல் குறைவதைத் தவிர்க்கலாம்.

பின்செய் நேர்த்தி

விதைத்த 30 நாட்கள் கழித்து களைக்கொத்து கொண்டு களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

 

அறுவடை

விதைத்த 30 - ம் நாள் செடிகளைக் கலைத்து இளங்கீரையாகவும், பின்னர் 60 மற்றும் 75 வது நாட்களில் 50 சதவிகித இலைகளையும் அறுவடை செய்யலாம் சாதாரணமாக 90 முதல் 110 நாட்களில் விதை அறுவடை செய்யப்படுகிறது. காய்கள் நன்கு முதிர்ந்தவுடன் (காயின் நிறம் பச்சை நிறத்திலிருந்து பொன்னிறமாக மாறும் போது) அறுவடை செய்வதால் நிலத்தில் விதைகள் உதிர்வதைத் தடுக்கலாம்.

விளைச்சல்

எக்டருக்கு சராசரியான மானாவாரியில் 400 முதல் 500 கிலோவும் இறவையில் 600 முதல் 1200 கிலோவும் விளைச்சலாக அறுவடை செய்யலாம்.

 

சந்தை வாய்ப்புகள்

நமது சமையலில் கொத்தமல்லி முக்கிய அங்கம் வகிப்பதால். இதற்கு டிமாண்ட் அதிகம். அதனால் மிக எளிதாக சந்தைகளில் கொத்தமல்லியை விற்பனை செய்துவிடலாம். ஒரு கட்டு கொத்தமல்லித் தழையை சராசரியாக 30 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

 




தற்போதைய செய்திகள்