குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் அதிகளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரை. இது இரு ஆண்டு தாவரம் . முதலாமாண்டில் ஆழமான ஆணிவேரும், கொத்தான இலைகளும், 2 ஆம் வருடத்தில் பூக்களும் உற்பத்தியாகின்றன. உலகளவில் இந்தியா காசினிக்கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது. காசினி பூக்கள் உற்பத்தியாவதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியம்.
இரகங்கள்
கொம்புக் காசினி, சீமைக் காசினி, சிக்கரி ரகங்களான வேர்காசினி, சாலடு காசினி ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
ஜீன் – ஜீலை மாதங்களில் விதைக்க வேண்டும்.
மண்
காசினி பலவகைப்பட்ட மண் வகைகளிலும் வளரும் தன்மையுடையது. செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை உடையது. ஆனாலும் குறைந்த வடிகால் வசதியுள்ள, இறுக்கமான மண் வகைகளை தவிர்க்க வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நிலத்தை நன்றாக உழவு செய்து பின்னர் இரண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம் மற்றும் 15-20 செ.மீ உயரமுள்ள நாற்றங்கால் பாத்தியை அமைத்துக் கொள்ள வேண்டும். நாற்றங்காலில் விதைகளை விதைத்து மணல் கொண்டு மூடி விட வேண்டும். விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரம் இருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடி செய்ய தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்டு, பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதைத்தல்
15-20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை தயார் செய்துள்ள பார்களின் பக்கவாட்டில் நட வேண்டும். வரிசைக்கு வரிசை 38 செ.மீ இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் பாய்ச்ச் வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
அடியுரமாக தொழு உரம் 15 டன் இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். நீர் பாய்ச்சும் போது அமுதக்கரைசல், பஞ்சகாவ்யா ஆகியவற்றை கலந்து விட வேண்டும். இது வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
நாற்றுகளை நட்ட பின் நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். களைகள் செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். நட்ட 15 – 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சி தாக்குதல்
கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். பின்பு அதை அழிக்க வேண்டும்.
அறுவடை
இதன் வேர்கள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்பே அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக நடவு செய்த 120 நாட்களில் அறுவடை செய்யலாம்.
