width:623px height:327px கீரைகள்

பொன்னாங்கண்ணி சாகுபடி




பொன்னாங்கண்ணி கீரையானது, இந்தியா முழுவதும் காணப்படும் படர்பூண்டு வகையைச் சார்ந்தது.

எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட, சிறு இலைகளைக் கொண்ட, தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமான பொன்னாங்கண்ணியில் வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும்.

பொன்னாங்கண்ணி கீரையை அறுத்துவிட்டால் மறுபடியும் துளித்து வளரும் தன்மையுடையது.

 

இரகங்கள்

சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

இதனை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.

விதையளவு

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

விதைகள் சிறியதாக இருப்பதால் கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின் கையால் கிளறி மெல்லிய போர்வை போல் அமைத்து பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகள் விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10-15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையை பொறுத்து அதிகப்படியான பயிர்களை களைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
பூச்சி தாக்குதல்

பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

இக்கீரையை 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கீரைகளை அறுவடை செய்ய வேண்டும்.




Site For Sale Contact : 9894832938