மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது.இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாகவும், சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது.
வல்லாரை ரகங்கள்:
இவற்றில் இரண்டு ரகங்கள் உள்ளது. அவை சமவெளி வல்லாரை மற்றொன்று மலைப்பகுதி வல்லாரை.
பருவகாலம்:
அக்டோபர் மாதம் வல்லாரை சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும்.
வல்லாரையானது மிதமான காலநிலை மற்றும் நிழலான பகுதிகளில் நன்கு வளரும். 50சதவிகிதம் நிழலில் அதிகமாக வளரும் மற்றும் மகசூல் அதிகமாக கிடைக்கும்.
மண் நிர்வாகம்:
வல்லாரை சாகுபடி பொறுத்தவரை ஈரப்பதமான சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச் சுற்றி நன்கு வளரும்.
அமில மண் மற்றும் உவர் மண்ணில் வளரும் தன்மை கொண்டது. ஈரத்தன்மையுள்ள, அங்கக தன்மை கொண்ட களிமண்ணில் நன்கு வளரும்.
நிலம் தயாரித்தல்:
வல்லாரை சாகுபடி பொறுத்தவரை தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5டன் தொழுவுரத்தை அடியுரமாக அளித்து நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும்.
விதை அளவு:
வல்லாரை சாகுபடி பொறுத்தவரை கணுக்கள் கொண்ட தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 1,00,000 எண்ணிக்கை தாவரங்கள் தேவைப்படும்.
நாற்றங்கால் தயாரித்தல்:
தேவையான அளவு படுக்கைகளை அமைத்து நடவு செய்ய வேண்டும். வேர்கள் நன்கு பிடிப்பதற்காக பாசனம் செய்ய வேண்டும்.
நடவு செய்தல்:
வல்லாரை சாகுபடி பொறுத்தவரை நேரடியாக வயலில் விதைக்கலாம் அல்லது நாற்றங்காலில் தயார் செய்துள்ள பயிர்களை 30 x 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்:
நடவு செய்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பயிர் நன்கு வளரும் வரை நான்கு அல்லது ஆறு நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு பயிரின் தேவைக்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும்.
உரமிடுதல்:
ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து 100 கிகி, மணிச்சத்து 60 கிகி மற்றும் சாம்பல் சத்து 60 கிகி கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும். இதையே இரண்டாக பிரித்து, இருமுறை கொடுக்கலாம்.
வல்லாரை பாதுகாப்பு முறை:
வல்லாரை சாகுபடி பொறுத்தவரை பயிரின் வளர்ச்சிக்கு களைகள் இடையூராக இருப்பதால் களையெடுத்தல் அவசியமாகும். நடவு செய்த 15-20 நாட்களுக்குள் களை எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த தாவரம் இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், எந்த நோய்களும் தாக்குவது இல்லை.
நீர் பாய்ச்சும் போது அமிர்தகரைசல்,பஞ்சகாவ்யா ஆகியவற்றை கலந்து நீர் பாய்ச்சினால் கீரை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
அறுவடை:
15 நாட்கள் இடைவெளியில் வளரும் கிளைகளிலிருந்து வெளிப்புற இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.
அறுவடை செய்யும் பொழுது முழுவதுமாக அறுவடை செய்யாமல் சிறிது பயிரை நிலத்தில் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் அது மறுபடியும் வளரும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 5500 கிகி கீரை மற்றும் 2000கிகி உலர் மூலிகை கிடைக்கும்.
