சாமந்தி இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.நிலையான சந்தை விலையுடைய மலர்களில் சாமந்தியும் ஒன்று. இதில் பல வண்ணங்கள் இருப்பினும் மஞ்சள் மற்றும் வெள்ளை ரகங்கள் பிரபலமானவை.
கோவை வேளாண் மையத்தில் சில ரகங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விதையை விட நாற்று மூலம் அதிகம் நடவு செய்யப்படுகிறது.
இரகங்கள் :
கோ1(மஞ்சள் நிறப்பூ) , கோ 2(கரும்பழுப்பு நிறப்பூ) மற்றும் எம்.டி.யு 1(மஞ்சள் நிறப்பூ) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஜுன் – ஜுலை மாதங்கள் பயிர் செய்ய ஏற்ற பருவங்கள் ஆகும்.
மண்
நீர்த்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு ஏற்றவை.
நிலத்தை தயார் செய்யும் முறை :
நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஹெக்டருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்கிவிட வேண்டும். நிலத்தை நன்கு சமன்படுத்தி பார்கள் அமைக்க வேண்டும்.
இடைவெளி :
இடைவெளி 1.5x1.5 அடியில் பார் அமைத்து நடலாம். நடவுக்கு ஆடி மற்றும் தை பட்டங்கள் ஏற்றவை. பருவம் தவறி நடும்போது செடிகளில் பூக்கும் திறன் மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். நாற்றுகளை பார்களின் ஒரு பக்கத்தில் வரிசையாக செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறு மற்றும் வேர்ப்பாகம் அனைத்தும் மறையும்படி நடுதல் வேண்டும்.
நடவு செய்யும் முன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, தலா 4 கிராம் டிரைக்கோடெர்மா விரடி மற்றும் சூடோமோனஸ் கலந்த கலவையில் முக்கி நடவேண்டும். ஒரு ஹெக்டருக்கு நடவு செய்ய 1,11,000 சாமந்திச் செடிகள் தேவைப்படும்.
உரங்கள் :
அடி உரமாக தொழுஉரம், அடுத்து இயற்கை கரைசல்கள் தொடர்ந்து அளிப்பதன் மூலமும், உயிர் உரங்கள் மாதம் ஒரு தடவை தொடர்ந்து அளிப்பதன் மூலமும், அதிக எடை, கவர்ச்சி மற்றும் அதிக நேரம் வாடாமல் இருக்கும் மலர்களை அறுவடை செய்யலாம்.
கட்டுப்பாடு :
சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்கும். இதற்கு கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவை தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.
மீன் அமிலத்தை, ஏக்கருக்கு ஐந்து லிட்டர் வரை தொழுஉரத்தில் கலந்து இடலாம். களை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நடவு செய்த ஆறாம் மாதம் முதல் பூக்கள் தோன்றும். மறுதாம்பு விடும் போது மூன்றாவது மாதம் முதல் பூக்கும்.
நீர் மேலாண்மை :
கண்டிப்பாக தண்ணீர் தேங்க கூடாது. நடுவதற்கு முன்னால் ஒரு முறையும், நடவு செய்த மூன்று நாட்களுக்குப் பின்னர் ஒருமுறையும் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்னர் மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
வயது :
நடவுப் பயிருக்கு 6 முதல் 8 மாதங்கள், மறுதாம்புப் பயிருக்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும்.
மகசூல் :
ஹெக்டருக்கு நடவுப் பயிரில் 20 டன் மலர்கள் கிடைக்கும். மறுதாம்புப் பயிரில் 10 டன் கிடைக்கும்.
