எப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருப்பது போல் இருப்பதால்தான் இதற்கு பெயர் வாடாமல்லி. இது வறண்ட பகுதியில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை மட்டுமே வளரும்.
இரகங்கள்
இதில் இருவகையான நிறங்கள் உள்ளன. அவை வெள்ளை, வாடாமல்லி ஆகும்.
பருவம்
ஆனி மாதம் பயிர் செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
மண்
தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றது.
விதையளவு : ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 10 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது 3 x 10 செ.மீ அளவுள்ள பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்தியின் மேல் மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்பு விதைகளை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும். பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 3 முதல் 4 உழவுகள் வரை உழுது மண்ணை பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும்.
விதைநேர்த்தி
500 கிராம் அசோஸ்பைரில்லத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து நடுவதற்கு முன் நாற்றை நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.
விதைத்தல்
நிலத்தின் தன்மையை பொறுத்து, தேவைப்படும் அளவிற்கு ஏற்ப பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். 30 – 35 நாள் வயதுடைய நாற்றை 2 அடிக்கு 1 அடி என்ற விகிதத்தில் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நாற்றை பார்களின் இருபுறமும் நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்தால் போதுமானது.
உரங்கள்
களை எடுத்தப்பின் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 25 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து செடிகளின் அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.
களை நிர்வாகம்
நடவு செய்த 20வது நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும். வயலில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
காஞ்சாரை நோய் தாக்குதல்
காஞ்சாரை நோய் தாக்கினால் செடியின் நுனி கருகி காணப்படும். அதேபோல் பூ கருகி காய்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும்.
நூற்புழு தாக்குதல்
நூற்புழு தாக்கினால் செடி மேலிருந்து கீழாக பட்டுக்கொண்டே வரும். இதனை கட்டுப்படுத்த நட்ட 40ம் நாள் அல்லது முதல் களையின் போது போரெட் அல்லது பியூரடான் குருணை மருந்துடன் டி.ஏ.பி அல்லது வேப்பம் புண்ணாக்கை சேர்த்து வயலில் தூவி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை
பூக்களின் தேவையைப் பொறுத்து சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம்.
