width:1800px height:1200px பழங்கள்

திராட்சை பழம் பயிரிடும் முறை




பன்னீர் திராட்சை சாகுபடி மூலம் நீண்டகாலத்துக்கு, ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும் கோடை வெயிலில் இருந்து உடலைப் பாதுகாக்கவும், தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும் பலர் தர்பூசணி, நுங்கு, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களைச் சாப்பிடுவது வழக்கம். இதில் குறிப்பாகச் செரிமானச் சக்தியை அதிகரிப்பது, ஆஸ்துமாவை மட்டுப்படுத்துவது, மார்பகப் புற்றுநோயைத் தடுப்பது.

ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு உகந்தது எனத் திராட்சை பழத்தின் மகத்துவத்தை மருத்துவர்கள் பட்டியல் இடுகின்றனர்.

 

பயிரிடும் முறை:

ஜூன் – ஜூலை மாதத்தில் திராட்சை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பூமி திராட்சை சாகுபடிக்கு ஏற்ற மண் வகை ஆகும். மண்ணின் கார அமிலத் தன்மை 6 .5 முதல் 7 .5 ஆக இருக்க வேண்டும். மண்ணின் உப்பு நிலை 1 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழுது சமன் படுத்த வேண்டும். பின் அதில் பன்னீர் ரகங்களுக்கு குழிகளை ௦.6 மீட்டர் அகலம், ௦.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர் இடைவெளியில் தோண்ட வேண்டும். மற்ற ரகங்களுக்கு 1 x 1 x 1 மீட்டர் அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளில் நன்கு மக்கிய உரம் அல்லது குப்பைகள் அல்லது பசுந்தழை உரம் கொண்டு நிரப்பி ஆற விட வேண்டும்.

வேர் வந்த முற்றிய குச்சிகள் தான் நடவுக்கு பயன்படுகின்றன. தயார் செய்துள்ள குழிகளில் வேர் வந்த முற்றிய குச்சிகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்யவேண்டும். பன்னீர் திராட்சையை 3 x 2 மீட்டர் இடைவெளியிலும், மற்ற ரகங்களை 4 x 3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

செடிகளை நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை செய்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன் நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளிவிட வேண்டும். பின்பு வளரும் பக்கக் கிளைகள் எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி, கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும்.

மாதமொருமுறை ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுஉரம் வைத்து தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பதினால் நல்ல விளைச்சல் பெறலாம். ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்டரில் இருந்து விதையில்லா ரகங்கள் 15 டன், பன்னீர் திராட்சை 30 டன் வரை மகசூல் கிடைக்கும்.

  •  

மகசூல்

பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிரக் கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை. கூடுதல் விளைச்சலுக்கு வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம். நிலத்தில் குழி தோண்டி இயற்கை உரங்களுடன், சிறிது செயற்கை உரத்தையும் சேர்த்து இட வேண்டும். அதன் பின்னர்ச் செடியை நட்டு வைத்து நல்ல தண்ணீர் மட்டும்

 

பாய்ச்ச வேண்டும். 15 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன் வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.

 

அதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும்.

சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம் வரை விலை போகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும்.

 

முதல் சாகுபடி செலவு

கோடை காலத்தில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மற்றக் காலத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை வீதம் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

தொடர்மழை பெய்தால் செவட்டை, சாம்பல் நோய் போன்றவை தாக்கலாம்.

அந்த நேரத்தில் பூச்சிமருந்தைத் தெளித்து நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்.

முதன்முதலில் ஒரு ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்ய வேண்டுமென்றால் குத்துக்கல், வலைக்கம்பி, உரம், செடி, கூலியாட்கள் என ரூ. 4 லட்சம் வரை செலவு ஏற்படும்.

அதன் பின்னர்ச் செலவு குறையத் தொடங்கும்.

முதல் அறுவடையிலேயே செலவழித்த மொத்தப் பணத்தையும் எடுத்துவிடலாம். குத்துக்கல், கம்பி போன்றவை 70 ஆண்டுகள் வரை சாகுபடி செய்தாலும் நீடிக்கும்.

ஐந்து ஆண்டு வளர்ந்த திராட்சை கொடியில் இருந்து விதைக் குச்சியை வெட்டி பதியன் போட்டுப் புதிய செடி வளர்க்கலாம். அது வேறு இடத்தில் புதிதாகத் திராட்சைத் தோட்டம் அமைப்பதற்குப் பயன்படும்.

 

சந்தைப்படுத்துதல்

தமிழகத்தில் மட்டுமல்ல கொல்கத்தா, கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்குப் பன்னீர் திராட்சை அதிகளவில் செல்கிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். பன்னீர் திராட்சையைச் சந்தைப்படுத்துதல் மிகவும் எளியது.




தற்போதைய செய்திகள்