width:519px height:292px மேலாண்மை செய்திகள்

தென்னையை தாக்கும் வெள்ளை ஈ கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தல்




தென்னை குரும்பை வளர்ச்சியை பாதித்து மகசூலை குறைக்கக் கூடிய ரூகோஸ் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரூகோஸ் வெள்ளை ஈ (சுருள் கள்ளிப்பூச்சி) தென்னையில் இலைக்கு அடியில் கூடுகட்டி சத்துக்களை உறிஞ்சுகிறது. இதன் 2ம் வினையாக அதில் வடியும் தேன் மூலமாக தென்னை இலையின் மீது கருப்பாக ஒரு பூஞ்சை வளர்கிறது. இதனால் ஒளிசேர்க்கை பாதிக்கப்பட்டு தென்னையில் குரும்பை வளர்ச்சி தடைபடுகிறது. இதை தொடர்ந்து வெய்யில் அதிகமாக ஆக தென்னையில் பாதிப்பு அதிகமாகி, வாழை, பாக்கு, கொய்யா, பப்பாளி, பலா, அரை நெல்லி, மாதுளை, வெப்பாலை, தீவனப்புல் ஆகியவற்றில் இந்த பாதிப்பு தொடங்கியுள்ளது. ஆகவே, இந்த பாதிப்பு மகசூல் இழப்பை ஏற்படுத்தும் முன் கவனமாக இருந்து ஒருங்கிணைந்த முறையில் இந்த பூச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.

பாதிப்பை குறைக்க அடர் மஞ்சள் நிற பிளாஸ்டிக் சீட்டை 4 அடிக்கு, 1.25 அடியில் பேனர் கட்டுவது போல் அடித்து அதில் ஏக்கருக்கு 7 இடத்தில் விளக்கெண்ணெய் (அல்லது) கிரீஸ் தடவி 6 அடி உயரத்தில் கட்ட வேண்டும். இதனால் தாய் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். மாலை நேரங்களில் தோட்டத்தில் (சூரிய மறைவுக்கு பிறகு) தென்னோலை, தழைகளை கொண்டு அரை மணி நேரம் எரியூட்டலாம். பூச்சிகள் நெருப்பில் விழுந்து மடியும். வெர்டிசிலியம் பூசனத்தை 1 லிட்டரை, நூறு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். என்கார்ஸ்யா ஓட்டுண்ணியை கொண்டு வந்து விடலாம். க்ரைசோபெர்லா பூச்சியை, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கொண்டு வரலாம். கண்டிப்பாக வேரில் ரசாயன மருந்து செலுத்துதல் மற்றும் ரசாயனம் தெளித்தல் கூடாது. அதனால் இயற்கை எதிரிகள் அழிந்து, பூச்சியை கட்டுப்படுத்த இயலாமல் போகும் என்றார்.




தற்போதைய செய்திகள்