சின்னமனூரில் செங்கரும்பு வாங்க ஆளில்லாததால் வயலில் அப்படியே விடப்பட்டுள்ளன. ஒரு செங்கரும்பு ரூ.15க்கு சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் நிலையில் உள்ளனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை பகுதியில் தை பொங்கல் சீசனுக்காக 500 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. இயற்கை முறையில் வளர்க்கப்படும் இப்பகுதி செங்கரும்பின் சுவைக்கு சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலியில் எப்போது தட்டுப்பாடு நிலவும். இந்த பொங்கல் சீசனில் வெளிமாவட்ட மொத்த வியாபாரிகள் எதிர்பார்த்த அளவில் வருகை தராததால், உள்ளூர் மார்க்கெட்டுக்கு ஒரு கட்டு (10 கரும்பு) ரூ.250 வீதம் விற்பனை செய்யப்பட்டது. சின்னமனூரில் 100 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு வெட்டப்படாமல் இருந்தது. மகாசிவராத்திரி விழாவில், குலதெய்வ வழிபாட்டிற்கு செங்கரும்பு விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளுக்கு இருந்தது. ஆனால் வழக்கமாக விற்பனையாகும் அளவிற்கு கூட இந்தாண்டு விற்பனையாகாமல் சுமார் 50 ஏக்கரில் உள்ள செங்கரும்பு அறுவடை செய்யப்படாமல் உள்ளது. இதை சில்லரை வியாபாரிகளுக்கு ரூ.150 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. முழுமையாக கரும்பு அறுவடை செய்யப்படாததால், அடுத்த சீசனுக்கு நடவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
