தென்னைக்கு ஊடுபயிராக கொய்யா சாகுபடி செய்யப்படுவதால் கம்பம் பகுதியில்அதன் பரப்பு அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் காய்கறி, பழங்களில் கொய்யா, மா, மாதுளை, திராட்சை, எலுமிச்சை, வாழை, பேசன் புரூட் என பல வகைப்பழங்கள் சாகுபடியாகிறது. கொய்யாவை பொறுத்தமட்டில், மரத்தில் வெயில் பட வேண்டும். விசாலமான தென்னந்தோப்புகளில் கொய்யா சாகுபடி செய்யலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கொய்யாவை தனிப்பயிராக சாகுபடி செய்வதே சிறந்தது. தென்னையில் ஊடுபயிராக தற்போது சாகுபடி செய்கின்றனர். நிழல் விழாமல் இருந்தால் நன்றாக இருக்கும். கொய்யா வீரிய ஒட்டு ரகங்கள் 6 மாதத்தில் பலன் தரும். ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின் பலன் எடுப்பதே சிறந்தது. அதுவரை பூக்களை உதிர்த்து விட வேண்டும். அடிக்கடி கவாத்து, நீர் மேலாண்மை அவசியம். மரங்களாக வளரவிடாமல், செடிகளாக பராமரிப்பு செய்ய வேண்டும்.
மரங்கள் என்றால் கிளைகள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்டு பலன் குறைந்து போகும். குறிப்பாக சிம்பு அடிக்கும் போது வெட்டி விடவேண்டும். இவ்வாறு செய்தால் நீண்ட நாட்களுக்கு பலன் கிடைக்கும், என்றனர். மாவட்டத்தில் கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சிந்தலச்சேரி, அய்யம்பட்டி, புலிகுத்தி, பல்லவராயன்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் கொய்யா, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது என்றனர்.
