நுண்ணீர்ப் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ், வேளாண்துறைக்கு 2019-20ம் ஆண்டில் 1,500 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது : மாவட்டத்தில் நுண்ணீர்ப்பாசன இயக்கத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள 1,500 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,287.89 ஹெக்டேர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1575.28 ஹெக்டருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
உணவுத் தானிய உற்பத்தி இலக்கை அடைந்திட ஏதுவாக, அனைத்து வேளாண் விரிவாக்க மையத்திலும் சான்று பெற்ற சிறுதானிய விதைகளான சோளம் கே-12, கோ-30, கம்பு கோ-10 ஆகியவை 4.90 மெ.டன்னும், பயறு வகைப் பயிர்களான துவரை கோ.ஆர்.ஜி.7, உளுந்து விபிஎன்.5, விபிஎன்.6, கொள்ளு பிஒய்.2 ஆகியவை 21 மெ.டன்னும், பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை விதை இரகம் கே.6, கே.9, ட்டி.எம்.வி.13, கோ-6, கோ-7 மற்றும் தாரணி இரகம் ஆகியவை 11.68 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உளுந்து வம்பன்-5, வம்பன்-6 ஆகிய விதைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறுவகை திட்டத்தின்கீழ், ஒரு கிலோவிற்கு ரூ.50 அல்லது 50 சதவிகித மானியமும், எண்ணெய் வித்துப்பயிரான நிலக்கடலைக்கு தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கத் திட்டத்தின்கீழ், கிலோ ஒன்றுக்கு ரூ.40 அல்லது 50 சதவிகித மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் யூரியா1779 மெ.டன், டிஏபி 755 மெ.டன், பொட்டாஷ் 1003 மெ.டன், காம்ளக்ஸ் உரம் 1872 மெ.டன் இருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
