width:600px height:413px மேலாண்மை செய்திகள்

முந்திரியில் பூச்சி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண் அறிவியல் மையம் ஆலோசனை




அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கிரீடு வேளாண் அறிவியல் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார் முந்திரியில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முந்திரி தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படுகின்றது. ஆனால் உற்பத்தி நிலை என்பது குறைவாகவே உள்ளது. எனவே முந்திரியில்.

அதிக மகசூல் பெற ஒரு சில வேளாண் தொழில் நுட்பங்கள் கையாள்வதன் மூலம் முந்திரியில் அதிக மகசூல் பெறலாம். முக்கியமாக பூச்சி தாக்குதலினால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

பூச்சிகளால் ஏற்படும் இழப்பு வருடம் முழுவதும் தென்பட்டாலும் கோடைகாலமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக சேதம் ஏற்படுகிறது. அதில் முக்கியமாக தண்டு மற்றும் வேர் துளைப்பான் மற்றும் தேயிலை கொசு இவை இரண்டினால் மட்டுமே சேதம் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் முந்திரியில் அடர்நடவு முறை, கவாத்து செய்தல், நீர் மற்றும் உர மேலாண்மை, ஊடுபயிர்கள், பூச்சிநோய் கட்டுப்பாட்டில் முக்கியமாக தண்டு துளைப்பான் மற்றும் தேயிலை கொசுவினை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

தண்டு மற்றும் வேர் துளைப்பான் பூச்சியின் புழுக்கள் மரத்தின் தண்டு பகுதியை தின்று சேதத்தை ஏற்படுத்தும். எனவே ஆரம்ப நிலையிலேயே சில அறிகுறிகள் தோன்றும்போதே பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புழுக்கள் மரத்தை துளைத்து உள்ளே சென்று விடும். அந்த இடத்தில் பிசின் வந்து கெட்டியாகி பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும் மரத்தின் அடியில் சக்கைகள் மென்று தின்று கீழே கிடக்கும். இவற்றை கட்டுப்படுத்த புழு தாக்குதலுக்கு உட்பட்ட மரத்தை வேரோடு தோண்டி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். முந்திரி தோப்பில் களைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வண்டுகள் மரப்பட்டடைகளில் முட்டையிடுவதை தவிர்க்க ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 3 சதவிகித வேப்ப எண்ணெய் கரைசலை மரங்களில் அடிப்பகுதியில் பூசி விட வேண்டும்.

தேயிலை கொசு முந்திரியில் 50-65 சதவிகிதத்திற்கு மேல் தேயிலை கொசுவினால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த தேயிலை கொசு தளிர், பூ, இளம்கொட்டைகளை தாக்கி அதிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால் தளிர்கள் கருகியும், பூக்கள் உதிர்ந்தும் கொட்டைகள் முதிர்வடையாமல் சிறியதாகவும் காணப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்த சீரான இடைவெளியில் மூன்று முறை மருந்து தெளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருந்து தெளிக்கும்போது தோப்பில் உள்ள வேப்பமரங்களுக்கும் சேர்த்து மருந்து தெளிக்க வேண்டும். கூடுமானவரை முந்திரி தோப்புகளில் வேப்ப மரங்களை தவிர்த்துவிடுவது நல்லது.

மருந்து தெளிப்பானது டிசம்பர், ஜனவரி மாதங்களில் முந்திரி துளிர்விடும் பருவத்தில் புரபனோபாஸ் 50 இ.சி. என்ற மருந்தினை 1.5 மில்லி 1 லிட்டர் நீருடன் கலந்து 1 கிராம் காதி சோப்பு என்ற ஒட்டு பசையினை சேர்த்து தெளிக்க வேண்டும்

. இரண்டாம் மருந்து தெளிப்பானது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூ கருகும் வாய்ப்பு அதிகம் உள்ள, இந்த பருவத்தில் குளோரிபைரிபாஸ் என்ற மருந்தினை 2.5 மில்லி 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். மூன்றாம் மருந்து தெளிப்பானது பிப்ரவரி, மார்ச் மாதம் முந்திரியில் பிஞ்சுவிடும் பருவமான, தேயிலை கொசு தாக்கத்தால் பிஞ்சுகள் கோனலாகவும் பிஞ்சுகள் முதிர்வடையாமலும் இருக்கும்போது தெளிக்க வேண்டும்.

இதனை கட்டுப்படுத்த அசிபேட் 75 எஸ்.பி. என்ற மருந்தினை 2 கிராம் ஒரு லிட்டர் நீர் அல்லது இமிடாகுளோபிரேட் 30 எஸ்.இ என்ற மருந்தினை 1.5 மில்லி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெவையான அளவு ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து தேயிலை கொசுவினை கட்டுப்படுத்தி முந்திரியில் அதிக மகசூல் பெறலாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்