மக்காச்சோள கழிவுகளை எரிக்கக் கூடாது என்று வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மங்களுர் பகுதியில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. விவசாயிகளில் சிலர் மக்காச்சோளம் அறுவடைக்குப் பின்னர் மீதமுள்ள பயிர் பகுதிகள், தோகைகளை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதுகுறித்து உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து, வேளாண்மை இணை இயக்குநர் ஜி.ஆர்.முருகன் செவ்வாய்க்கிழமை மங்களூர் வட்டாரப் பகுதியில் ஆய்வு செய்து, வெளியிட்ட அறிவிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: மாவட்டத்தில் நிகழாண்டு சுமார் 43,000 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நல்ல பருவ நிலை நிலவியதால் விவசாயிகள் அதிக மகசூல் பெற்றுள்ளனர். விவசாயிகள் சிலர் தற்போது அறுவடைக்குப் பின்னர் மக்காச்சோள சக்கைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மண்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மக்காச்சோள பயிர் அறுவடை முடிந்தவுடன் அதன் கழிவு பகுதிகள் மண்ணில் கலக்குமாறு உழவு செய்ய வேண்டும். இந்த முறை உழவினால் மண்ணில் அங்கக சத்து பெருகி மண்வளம் பாதுகாக்கப்படும். நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் மண்ணில் அதிகரிக்கிறது. மண்ணில் நீர் பிடிப்பு தன்மையும் அதிகரிப்பதால் அடுத்து பயிர் செய்யும்போது மகசூல் அதிகரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
