தென்னையில் கூன்வண்டு தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் தென்னை சாகுபடியில், திருப்பூர் மாவட்டம் இரண்டாமிடம் வகிக்கிறது. மேலும், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சிலந்தி தாக்குதல், வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் என தொடர்ந்து தென்னை பயிர்களில் பல பாதிப்புக்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இவற்றிலிருந்து, தென்னையை காப்பாற்ற, வேளாண் துறையினர் பல ஆலோசனைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தென்னையில் கூன்வண்டு தாக்குதல் தென்படத் துவங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் உள்ள, மத்திய அரசின் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் ஆனந்தராஜா, மண்ணியல் துறை வல்லுநர் தனசேகரன் பாண்டியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: விவசாயிகளுக்கு, நல்ல வருவாய் தரக்கூடிய பயிராக, தென்னை விளங்குகிறது. தற்போது, தென்னையில் கூன் வண்டு தாக்குதலால், தென்னை மரம் பட்டுப்போவது தெரியவந்துள்ளது. விவசாயிகள், கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையை கையாள்வதன் மூலம், தென்னை சாகுபடியில், மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்ட முடியும். தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில், சிவப்பு நிற சாறு வடிந்த நிலையில் காணப்படும், சிறுசிறு துளைகளில், கூன் வண்டு இருக்கும். தென்னை மரத்தின் ஓலைகள், மஞ்சள் நிறமாக, நுனி பக்கத்திலுள்ள, நடு குருத்து வாடிய நிலையில் காணப்படும். பின், மரம் முற்றிலும் காய்ந்து விடும்.
வண்டின் முட்டை, வெள்ளை நிறத்திலும், புழுக்கள் லேசான மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மார்பு பகுதியில், ஆறு அடர் புள்ளிகள் காணப்படும். ஆண் வண்டுகள், நீல முகத்துடன் இருக்கும். வண்டுத் தாக்குதலால் காய்ந்து போன மரம் சேதமடைந்த மரத்தை அகற்றி, கூன் வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம். தென்னந்தோப்பை தூய்மையாக, ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம், வண்டின் தாக்குதலைத் தவிர்க்கலாம். மணல், வேப்பங்கொட்டை தூளை, 2:1 என்ற அளவில் கலந்து, மரத்தின் குருத்து பகுதியில், மேல் உள்ள மரத்தின் மூன்று மட்டைகளின் கீழ் பகுதியிலும் இடவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
