கத்தரி சாகுபடியில், வரப்பு பயிர்கள் மூலம் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப் பாசனத்தில், கத்தரி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. வீரிய ரக விதைகள், சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள் என சாகுபடியில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகின்றனர் விவசாயிகள். இருப்பினும், பருவநிலை மாற்றங்களால், சாகுபடியில், நோய்த்தாக்குதல் பரவி, பாதிப்பை எற்படுத்துகிறது. இதை கட்டுப்படுத்த, அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, சில சாகுபடி முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கத்தரி நடவின் போதே வரப்புகளில், மக்காச்சோளம் நடவு செய்யலாம். இதனால், கத்தரியை தாக்கும் பெரும்பாலான பூச்சிகள், மக்காச்சோள பயிருடன் தாக்குதலை நிறுத்தி விடும். இதே போல், நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, செண்டுமல்லியை வரப்பு பயிராகவும் வரிசை பயிராகவும் நடவு செய்யலாம். கோடை கால சாகுபடியில், நிலப்போர்வை அமைப்பது அவசியமாகும். இதனால், சாகுபடியில் களையை கட்டுப்படுத்தி, நீர் தேவையையும் குறைக்கலாம். இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
