காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், தினமும், 9,000 படகுகளில் 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். தினமும், சுமார் 15 முதல் 18 டன் மீன் விற்பனைக்கு வருகிறது. அதன் மூலம் ரூ.20 கோடிக்கு விற்பனை நடக்கிறது. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், தினமும் மீன் வாங்க, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இந்நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கரோனா நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து, காசிமேடு மீனவர் சங்கத்தினர், காசிமேட்டில் மீன் விற்பனை நடக்காது என அறிவித்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதலே, மக்கள் கூட்டம் அலைமோதியதால், மீன் விலையும், சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. மீன் விற்பனையில் ஈடுபடும், அகில இந்திய மீனவர் சங்க செயல் தலைவர் கூறியதாவது: கொரோனா பீதியால், திடீரென மீன் விற்பனை நிறுத்தப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
எனவே, கோழி கறிக்கு மாற்றாக மீன் வாங்குவது அதிகரித்துள்ளதால், மக்கள் மீன்களை வாங்கி சேமித்து பயன்படுத்துகின்றனர். இதனால் தற்காலிகமாக மீன் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
