வார விடுமுறை மற்றும் மக்கள் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து இரு தினங்களுக்கு விடுமுறைக்கு பின் திறந்த ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்தது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் சனியன்று மார்க்கெட்டிற்கு விடுமுறையாகும். இந்நிலையில் பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுகிழமை (மார்ச் 22) மார்க்கெட் விடுமுறை விடப்பட்டது.
இதன் காரணமாக சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்து விட்டது. இந்த இரண்டு நாட்களும் மார்க்கெட் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வரவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை மார்க்கெட் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.
இரண்டு நாட்களாக பறிக்காமல் விடப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் மொத்தமாக பறித்துக் கொண்டு சரக்கு வாகனங்களில் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட பல காய்களின் விலை ஏற்றமடைந்தும், வெண்டை உள்பட சிலவற்றின் விலை குறைந்தும் விற்பனையானது.
