தேனி மாவட்ம், கூடலூரில், நெல் அறுவடையை தொடர்ந்து, வயல்களில் பாகற்காய், பயறு, கத்தரிகாய், பூசணி, மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட கோடைகால காய்கறிகளை, விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது, பாகற்காய், பயறு அதிகளவில் அறுவடை செய்து வருகின்றனர்.
அவை, பெரும்பாலும் கேரளாவுக்கு செல்கிறது. கிலோ, ரூ.30 விலை எதிர்பார்த்த நிலையில், கடந்த வாரம் விவசாயிகளிடம், ரூ.10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது, கரோனா காரணமாக, கேரளாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பாகற்காய் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இதனால், கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரம், கரோனா காரணமாக, கேரளா மக்கள் சைவ உணவுக்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் விரும்பி உண்ணும் பயறுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் விலையும் உயர துவங்கி உள்ளது.
இதனால், கடந்த வாரம் எட்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட பயறு, தற்போது, ரூ.25 வரை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு விலை கிடைப்பதால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கேரளாவில் பயறின் தேவை அதிகரிப்பால், விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போன்று பாகற்காய் உள்ளிட்ட மற்ற காய்கறிகளும் விலை உயர்வு கிடைத்தால், நஷ்டத்தை ஈடு செய்ய முடியும் என்றார்.
