மடத்துக்குளம் பகுதிகளில், அறுவடை செய்த மக்காச்சோளத்துக்கு, நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் முக்கிய சாகுபடியாக உள்ளது. குறைவான பாசன நீரிலும் வளர்ந்து விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. இப்பகுதியில், சுமார் 600 ஏக்கர் பரப்பில் சாகுபடி நடந்ததில், கடந்த தை மாதம் அறுவடை தொடங்கியது. ஆரம்பத்தில், 100 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை, ரூ.1,600 முதல் ரூ.1,700 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது, ரூ.1,000 ஆக சரிந்துள்ளது. இந்த விலை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதற்கு நிலையான விலை தேவை என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்ய, ரூ.30,000 வரை செலவாகிறது. அறுவடையின் போது, 20 முதல் 25 மூட்டைகள் தான் கிடைக்கிறது. சில விளைநிலத்தில் குறைவான சாகுபடி, கிடைத்ததால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல இடங்களில், அறுவடை செய்த மக்காச்சோளத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்துள்ளோம். நாளுக்கு நாள் விலை சரிந்து வருகிறது. இதற்குத் தீர்வாக மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அரசு நிலையான கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
